இந்திய தடகள வீரர்கள் இருவர் காமன்வெல்த் போட்டியிலிருந்து வெளியேற்றம்... 

First Published Apr 14, 2018, 11:54 AM IST
Highlights
Two Indian athletes are out of Commonwealth Games


காமன்வெல்த் போட்டியின்போது தடையை மீறி ஊசியை பயன்படுத்திய இந்திய தடகள வீரர்களான கே.டி.இர்ஃபான், ராகேஷ் பாபு ஆகியோர் போட்டியிலிருந்து வெளியேற்றி காமன்வெல்த் விளையாட்டுச் சம்மேளனம் (சிஜிஎஃப்) உத்தரவிட்டது.

21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை கோல்ட்கோஸ்ட் நகரில் தொடங்கின. இதில் 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர். 

இந்தியா சார்பில் 220 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. பளு தூக்குதல், ஹாக்கி, துப்பாக்கி சுடுதல், பாட்மிண்டன், குத்துச்சண்டை, பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போன்றவற்றில் இந்தியா பதக்கங்கள் வென்று குவித்து வருகின்றது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் ஊசிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ தேவை இருப்போர் உரிய முன் அனுமதி பெற்று அதை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்திய நடைப் பந்தய வீரர் கே.டி.இர்ஃபான், மும்முறை தாண்டுதல் வீரர் ராகேஷ் பாபு ஆகியோர் ஊசியை பயன்படுத்தியதாக சிஜிஎஃப் மருத்துவ ஆணையம் புகார் தெரிவித்தது. 

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சிஜிஎஃப் நீதிமன்றம், வீரர்கள் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்து, அவர்களது அங்கீகாரத்தை ரத்து செய்தது.

இந்த விவகாரத்தில், முறையான விசாரணைக்குப் பிறகு இருவரும் தண்டிக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ள இந்திய தடகள சம்மேளனம், விசாரணைக்காக மூன்று நபர் குழுவையும் அமைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

எனினும், வீரர்கள் மீதான தடைக்கு எதிராக காமன்வெல்த் விளையாட்டுச் சம்மேளன நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சிஜிஎஃப் தலைவர் லூயிஸ் மார்டின் வெளியிட்ட அறிக்கையில், "காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் அனுமதி, இர்ஃபான் மற்றும் ராகேஷுக்கு உடனடியாக ரத்து செய்யப்படுகிறது. 

அவர்களுக்கான அங்கீகாரம் நீக்கப்படுவதுடன், அவர்கள் விளையாட்டு கிராமத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும், ஆஸ்திரேலியாவிலிருந்து அவர்களை உடனடியாக இந்தியா அனுப்பி வைக்க இந்திய காமன்வெல்த் விளையாட்டுச் சங்கம் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

tags
click me!