கொரோனா எதிரொலி.. ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைப்பு

By karthikeyan VFirst Published Mar 24, 2020, 6:13 PM IST
Highlights

கொரோனா அச்சுறுத்தலால், வரும் ஜூலை மாதம் ஜப்பானின் டோக்கியா நகரில் தொடங்கவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 

சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் வேகமாக பரவி சர்வதேசத்தையே பயங்கரமாக அச்சுறுத்திவருகிறது. உலகம் முழுதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்தை எட்டப்போகிறது. கொரோனாவிற்கு 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால், மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்வது மட்டுமே கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கான ஒரே வழி. எனவே உலகம் முழுவதும் முற்றிலுமாக முடங்கியுள்ளது. 

கிரிக்கெட் தொடர்கள் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் அனைத்துமே தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. வரும் 29ம் தேதி தொடங்கப்படவிருந்த ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்பின்னரும் தொடங்குவது சந்தேகம் தான்.

இவ்வாறாக விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டுவரும் நிலையில், வரும் ஜூலை மாதம் 24ம் தேதி தொடங்கப்படவிருந்த ஒலிம்பிக் போட்டிகள், திட்டமிட்டபடியே நடத்தப்படும் என்று கடந்த சில தினங்களுக்கு முன் ஜப்பான் அரசு தெரிவித்திருந்தது. 

ஆனால் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகமாகிவருவதாலும், இதிலிருந்து தப்பிக்க தனிமைப்படுத்தலே ஒரே வழி என்பதால், இந்நேரத்தில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது சரியாக இருக்காது. எனவே, ஒலிம்பிக் போட்டிகளை இப்போதைக்கு நடத்த வேண்டாம் என்ற ஜப்பான் அரசின் பரிந்துரையை ஏற்று, ஒலிம்பிக் கமிட்டி ஓராண்டுக்கு ஒலிம்பிக்கை ஒத்திவைத்துள்ளது.   

click me!