இன்று தொடங்குகிறது டி.என்.பி.எல்; திண்டுக்கல், தூத்துக்குடி இடையே முதல் ஆட்டம்…

First Published Jul 22, 2017, 11:15 AM IST
Highlights
Today begins with TNPL The first game between Dindigul and Thoothukudi


தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி சீசன் – 2 சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், நடப்பு சாம்பியனான தூத்துக்குடி தூத்தி பேட்ரியாட்ஸ் அணியும் மோதுகின்றன.

தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் இந்த சீசனில் மொத்தம் 32 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

சென்னை, திருநெல்வேலி, திண்டுக்கல் ஆகிய இடங்களில் போட்டி நடைபெறும் இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், தூத்தி பேட்ரியாட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், லைக்கா கோவை கிங்ஸ், மதுரை சூப்பர்ஜயன்ட், திருவள்ளூர் வீரன்ஸ், காரைக்குடி காளை, ரூபி திருச்சி வாரியார்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

தமிழகத்தின் முன்னணி வீரர்களான அஸ்வின் (திண்டுக்கல் டிராகன்ஸ்), தினேஷ் கார்த்திக், அபிநவ் முகுந்த (இருவரும் தூத்தி பேட்ரியாட்ஸ்), முரளி விஜய் (லைக்கா கோவை கிங்ஸ்) ஆகியோர் இந்த சீசனில் விளையாடவில்லை.

காரைக்குடி அணியில் 14 வயது ஆல்ரவுண்டரான நிவேதன் ராதாகிருஷ்ணன் இடம்பெற்றுள்ளார். அவர் தனது 8-ஆவது வயதில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 4-ஆவது டிவிஷன் லீகில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்றின் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றில் விளையாட தகுதி பெறும். லீக் சுற்று ஆட்டங்கள் ஆகஸ்ட் 14-ஆம் தேதியோடு நிறைவடைகின்றன.

ஆகஸ்ட் 15-ஆம் தேதி சென்னையில் முதல் தகுதிச் சுற்றும், ஆகஸ்ட் 16-ஆம் தேதி திண்டுக்கல்லில் வெளியேற்றும் சுற்றும் (எலிமினேட்டர் சுற்று) நடைபெறுகின்றன. ஆகஸ்ட் 18-ஆம் தேதி திருநெல்வேலியில் 2-ஆவது தகுதிச்சுற்று நடைபெறுகிறது. ஆகஸ்ட் 20-இல் சென்னையில் இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.

இந்தப் போட்டிக்கான மொத்தப் பரிசுத் தொகை ரூ.3.4 கோடியாகும். இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.1 கோடியும், 2-வது இடம்பிடிக்கும் அணிக்கு ரூ.60 இலட்சமும், 3 மற்றும் 4-வது இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.40 இலட்சமும், 5 முதல் 8-வது இடத்தைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.25 இலட்சமும் வழங்கப்படவுள்ளன.

tags
click me!