தூத்தி பேட்ரியாட்ஸ் அணியின் தடை நீங்கியது; இனி டி.என்.பி.எல்-ல் பங்கேற்கும்…

First Published Jul 22, 2017, 11:10 AM IST
Highlights
tuti Patriots team ban was lifted


தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட தூத்துக்குடி ஆல்பர்ட் தூத்தி பேட்ரியாட்ஸ் அணிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

தூத்துக்குடி ஸ்போர்ட்ஸ் என்டர்டெய்ன்மன்ட் (பி) லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநரும், தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் தூத்தி பேட்ரியாட்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவருமான ஆல்பர்ட் முரளிதரன் இந்தியன் வங்கியுடன் கூட்டு ஒப்பந்தம் செய்து ரூ.5.21 கோடி கடன் பெற்றிருந்தார்.

அவர், ஓராண்டுக்குள் பணத்தை திரும்பச் செலுத்துவதாக உறுதியளித்திருந்த நிலையில் ரூ.2.69 கோடி பாக்கி வைத்திருந்ததால் அந்த பணத்தைச் செலுத்துமாறு இந்தியன் வங்கி சார்பில் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் போடப்பட்டது.

வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி என். ராஜசேகர், தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் ஆல்பர்ட் தூத்தி பேட்ரியாட்ஸ் அணி அடுத்த மாதம் 17 வரை ஒரு மாதத்துக்கு விளையாட தடை விதித்து கடந்த 18-ஆம் தேதி தீர்ப்பளித்தார்.

இதைத் தொடர்ந்து, ஸ்போர்ட்ஸ் என்டர்டெய்ன்மன்ட் (பி) லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் இந்தியன் வங்கியுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் ஒரு கோடி ரூபாய் இந்தியன் வங்கிக்குச் செலுத்தி விட்டு மீதம் உள்ள தொகைக்கு உறுதிமொழி பத்திரம் வழங்கப்பட்டது.

இதையடுத்து தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் ஆல்பர்ட் தூத்தி பேட்ரியாட்ஸ் அணி விளையாட விதித்த தடையை நீக்குவதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என இந்தியன் வங்கி சார்பில் வாதாடிய வழக்குரைஞர் செங்குட்டுவன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அதன்படி, ஆல்பர்ட் தூத்தி பேட்ரியாட்ஸ் அணிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி நீதிபதி ராஜசேகர் நேற்று உத்தரவிட்டார்.

tags
click me!