
பெர்த் நகரில் நடந்த ஆஷஸ் கோப்பை கிரிக்கெட் டெஸ்ட் தொடரை 3 ஆண்டுகளுக்கு பின், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.
3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை ஒரு இன்னிங்ஸ், 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தொடரை வசப்படுத்தியது ஆஸ்திரேலியா அணி. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரை 3-0 என்று ஆஸ்திரேலியா வென்றது.
ஆஷஸ் கோப்பை டெஸ்ட் போட்டி ர் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரிய போட்டித் தொடராகும். இரு நாட்டு ரசிகர்கள் மட்டுமல்லாது, உலக அளவில் ஆஷஸ் தொடரைக் காண ரசிகர்கள் வருவார்கள். அந்த அளவுக்கு இந்த தொடர் பரபரப்பாக இருக்கும். இரு அணியினரும் அனல் பறக்க மோதிக்கொள்வார்கள்.
இந்த தொடரை கடந்த 2013-14ம் ஆண்டு ஆஸ்திேரலிய அணி கைப்பற்றி, 2015ம் ஆண்டு இங்கிலாந்திடம் பறிகொடுத்தது.
இந்நிலையில், இந்த ஆண்டு ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியா நாட்டில் நடந்தது. பிரிஸ்பேனில் நடந்த முதல் போட்டியிலும், அடிலெய்டில் நடந்த 2-வது போட்டியிலும் இங்கிலாந்தை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில் 3-வது டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் கடந்த 14ந்தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 403 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் மாலன் 140 ரன்களும், பேர்ஸ்டோ 119 ரன்களும் சேர்த்தனர். ஆஸ்திரேலியத் தரப்பில் மிட்ஷெல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், ஹேசல்வுட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அதன்பின் முதலாவது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்(239) இரட்டை சதம், மார்ஷ்(189) சதம் ஆகியோரின் முத்தாய்ப்பான ஆட்டத்தால், 9 விக்கெட்டுகளுக்கு 662 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து அணியைக் காட்டிலும், 259 ரன்கள் கூடுதலாகச் சேர்த்தது.
தொடர்ந்து, 2-வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி நேற்றைய 4-வது ஆட்டம் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் சேர்த்து இருந்தது. மாலன் 28, பேர்ஸ்டோ 18 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இன்றைய கடைசி நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.
மழை காரணமாக ஆட்டம் 3 மணிநேரம் தாமதாகத்தான் தொடங்கியது. இன்றைய போட்டி டிராவில் முடியவே அதிகமான வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டது. ஆனால், ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சாளர்கள் ஹேசல்வுடந், பாட் கம்மின்ஸ் ஆகியோரின் வேகத்தில் இங்கிலாந்து வீரர்களின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன.
பேர்ஸ்டோ(14), மெயின் அலி(11), வோக்ஸ்(22), ஓவர்டன்(12), பிராட்(0) என சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். கடைசி வரை போராடிய மாலன்(54) ரன்களில் வெளியேறியதையடுத்து 72.5 ஓவர்களில் 218 ரன்களுக்கு இங்கிலாந்து ஆட்டமிழந்தது. இதனால், 41 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசல்வுட் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். ஆட்டநாயகன் விருதை ஸ்டீவ் ஸ்மித் பெற்றார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.