ஸ்டீவ் வாக் என்னை கிண்டலடித்தார்.. பதிலுக்கு நான் பந்தை அடித்தேன்..!

First Published Dec 18, 2017, 6:00 PM IST
Highlights
rahul dravid motivational speech


தான் வெற்றியாளன் என்பதை விட, தோல்வியடைந்தவன் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் பெருமையாக தெரிவித்துள்ளார்.

அறக்கட்டளை ஒன்றின் சார்பில் நடத்தப்பட்ட தடகள வீரர்களுக்கான கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் பங்கேற்று பேசியதாவது: 

நான் விளையாடியுள்ள 604 சர்வதேச போட்டிகளில் 410 போட்டிகளில், 50 ரன்களை தாண்டவில்லை. எனவே தோல்வியைப் பற்றி பேச எனக்குத் தகுதியுள்ளது.  நாம் தோல்வியடையும்போது நிறைய விஷயங்களை மூடி மறைக்க முயற்சிப்போம். வேறொருவரை குறை கூறுவோம், ஏதோ ஒரு காரணம் தேடுவோம். ஆனால் தோல்வி, நம்மைப் பற்றி தெரிந்து கொள்ள நல்ல வாய்ப்பாகும்.

வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் சரியாக ஆடாமல் போனால், அந்த சூழ்நிலை சாதகமாக இல்லை அல்லது போதிய பயிற்சி இல்லை என்று பதில் சொல்வது ஒரு வகை. ஆனால் சிறந்த வீரர்கள் தோல்வியை வாய்ப்பாக பார்ப்பார்கள். அதனால் தோல்வியடைவதில் தவறில்லை. ஆனால் சிறப்பாக தோற்க கற்றுக்கொள்ள வேண்டும்.

2001 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடந்த டெஸ்ட் போட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். நாங்கள் மும்பையில் நடந்த போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்தோம். நானும் சரியாக விளையாடவில்லை. நான் 6-வது வீரராக ஆட வைக்கப்பட்டேன். இரண்டாவது இன்னிங்ஸில் நான் ஆட சென்றபோது, ராகுல் 6-வது நிலையிலா? அடுத்த போட்டியில் என்ன 12-வது நிலையிலா? என்று ஸ்டீவ் வாக் கிண்டலாக பேசினார்.

ஆனால், ஒவ்வொரு பந்தாக எவ்வளவு சந்திக்க முடியும் என்று பார்க்கிறேன் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். அதுதான் அப்போது என்னால் செய்ய முடிந்த எளிமையான விஷயம். அது கைகொடுத்தது.

அதனால் எளிமையான அதே சமயத்தில் முக்கியமான விஷயத்தின் மீது கவனம் செலுத்துங்கள். அதற்கு தேவையான ஒன்று பயிற்சிதான் என டிராவிட் பேசினார்.
 

click me!