இந்திய அணி உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கிறது – ஜெயசூர்யா….

First Published Dec 22, 2016, 11:53 AM IST
Highlights


இந்திய அணி உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கிறது. அதனால்தான் இங்கிலாந்து போன்ற வலுவான அணியையும் மிக எளிதாக வீழ்த்தியிருக்கிறது என முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்தியா 4-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், பாட்னாவில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஜெயசூர்யா “இந்திய அணி உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கிறது. அதனால்தான் இங்கிலாந்து போன்ற வலுவான அணியையும் மிக எளிதாக வீழ்த்தியிருக்கிறது.

விராட் கோலி தலைசிறந்த கேப்டன். விராட் கோலியின் எழுச்சி மிக்க தலைமையின் காரணமாகவே இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்தியா அபார வெற்றி கண்டுள்ளது. அவர், பந்துவீச்சாளர்களை சிறப்பாக பயன்படுத்துவதோடு, தானும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கருண் நாயர் மிகச்சிறப்பாக ஆடி முச்சதம் அடித்துள்ளார். அது எளிதல்ல. ஒருவர் முச்சதம் என்ற மைல்கல்லை எட்டுவதற்கு மிகப்பெரிய பொறுமை அவசியமாகும்.

அனில் கும்ப்ளே இப்போது பயிற்சியாளராக அடியெடுத்து வைத்திருக்கிறார். அவர் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர். அதேபோன்று பயிற்சியாளராகவும் அவர் சாதிப்பார் என்றுத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய அணியின் முன்னாள் தேர்வுக் குழு உறுப்பினரான சபா கரிம் கூறுகையில், "இளம் வீரரான கருண் நாயருக்கு மிகச்சிறந்த எதிர்காலம் இருக்கிறது. உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக ஆடியதன் அடிப்படையில் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட கருண் நாயர், இப்போது இங்கிலாந்துக்கு எதிராக முச்சதம் அடித்ததன் மூலம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்' என்றார்.

அனைத்து விதமான போட்டிகளுக்கும் இந்திய அணியின் கேப்டனாக கோலி நியமிக்கப்படலாமா என்ற கேள்விக்குப் பதிலளித்த சபா கரிம், "அதற்கு கோலி தகுதியானவர். ஆனால் 2017 சாம்பியன்ஸ் டிராபி போட்டி வரை எம்.எஸ்.தோனி கேப்டனாக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகும்போது, ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாகிவிடுவார் கோலி' என்றார்.

 

tags
click me!