
விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு மாவட்ட ஆட்சியர் முன்னுரிமை அளித்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் பாஸ்கரன் தெரிவித்தார்.
திருச்சி தேசியக் கல்லூரியின் முதுநிலை உடற்கல்வி மற்றும் விளையாட்டு அறிவியல் துறை சார்பில் "விளையாட்டில் மறுமலர்ச்சி' என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார் பாஸ்கரன்.
அப்போது அவர் பேசியது:
அதிக மக்கள்தொகை கொண்ட நம் நாட்டில் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க முடியவில்லை. ஒரு வீரர் தோற்கும்போது அவர் மீது நாம் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைக்கிறோம். ஆனால் ஒருபோதும் அவர் தோற்றதற்கான காரணத்தைக் கண்டறிந்து அதற்கு தீர்வு காண முயற்சிப்பதில்லை. இனியாவது அதுபோன்ற குறைகளை சரி செய்ய முயற்சிக்க வேண்டும்.
ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் எத்தனை பேர் விளையாட வருகிறார்கள் என்பதை முதலில் எண்ணிப் பாருங்கள். யாரையும் குறைவாக மதிப்பிடாதீர்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கும். அவர்களை சரியான நேரத்தில் கண்டறிந்து ஊக்கப்படுத்தினால் தலைசிறந்த வீரராக உருவெடுப்பார்கள்.
நம்முடைய விளையாட்டு வீரர்களை மற்ற நாட்டு வீரர்களுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள். பெரிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையிலும், உசேன் போல்ட் தட களத்தில் சிறந்த வீரராகத் திகழ்ந்து வருகிறார்.
2020 அல்லது 2024 ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெறுவதை இலக்காகக் கொண்டு அதற்கான பணிகளை இப்போதே மேற்கொள்ள வேண்டும். வெளிநாட்டுப் பயிற்சியாளர்களைக் கொண்டு தான் பயிற்சி அளிக்க வேண்டும் என்றில்லை. நம் நாட்டிலும் தலைசிறந்த பயிற்சியாளர்கள் உள்ளனர்.
125 கோடிக்கு மேல் மக்கள்தொகையைக் கொண்ட இந்தியாவில் குறைந்த எண்ணிக்கையிலான வீரர்கள்தான் உருவாகுகிறார்கள். பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற்ற சேலத்தைச் சேர்ந்த மாரியப்பன் எந்த பின்புலத்தில் பதக்கம் பெற்றார். சொந்த முயற்சியாலும், தீவிரமான உழைப்பாலும் அவரால் பதக்கம் பெற முடிந்தது.
எனவே, வீரர்களுக்கும், வீராங்கனைகளும் அவரைப் போன்று முயற்சி செய்ய வேண்டும்.
அந்தந்த மாவட்டங்களில் விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு மாவட்ட ஆட்சியர் முன்னுரிமை அளித்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்” என்றார் பாஸ்கரன்.
கருத்தரங்குக்கு தேசியக் கல்லூரி முதல்வர் க. அன்பரசு தலைமை வகித்தார். மாநகரக் காவல் துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) எம். மயில்வாகனன், தேசியக் கல்லூரிச் செயலர் கே.ரகுநாதன், வாசன் எஸ்டேட்ஸ் உரிமையாளர் ரவிமுருகையா, ரோட்டரி மாவட்டம் (3000) ஆளுநர் எம். முருகானந்தம், மலேசியாவைச் சேர்ந்த லிம் உள்ளிட்டோர் பேசினர்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் தங்களது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து பேசுகின்றனர்.
சனிக்கிழமை மாலை நடைபெறும் நிறைவு விழாவில், ஏடிஜிபி மஞ்சுநாதா, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஏ.எம். மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.