டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியின் மிகப்பெரிய வெற்றி!! வெஸ்ட் இண்டீஸ் படுதோல்வி

By karthikeyan VFirst Published Oct 6, 2018, 3:11 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் மிகப்பெரிய டெஸ்ட் வெற்றி இதுதான். 
 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் மிகப்பெரிய டெஸ்ட் வெற்றி இதுதான். 

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் இடையே ராஜ்கோட்டில் நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 649 ரன்களை குவித்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, அஷ்வினின் சுழலில் சுருண்டது. முதல் இன்னிங்ஸில் வெறும் 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முதல் இன்னிங்ஸின் இந்திய அணியின் சார்பில்  அஷ்வின் 4 விக்கெட்டுகளையும் ஷமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஜடேஜா, உமேஷ், குல்தீப் ஆகிய மூவரும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். 

ஃபாலோ ஆன் பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. இரண்டாவது இன்னிங்ஸிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. இம்முறை அந்த அணியின் தொடக்க வீரர் பவல் மட்டும் நிதானமாகவும் அதேநேரத்தில் அதிரடியாக ஆடி ரன்களையும் குவித்தார். ஒருமுனையில் பிராத்வெயிட், ஹோப், ஹெட்மயர், ஆம்பிரிஷ், சேஸ் என விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் அபாரமாக ஆடி அரைசதம் கடந்த பவல் 83 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதன்பிறகு எஞ்சிய விக்கெட்டுகளும் சொற்ப ரன்களில் விழுந்தன. முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் ஆர்டரை அஷ்வின் சரித்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் குல்தீப் யாதவ் சரித்தார். குல்தீப் யாதவ் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 196 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதையடுத்து இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் மிகப்பெரிய டெஸ்ட் வெற்றி இதுதான். இதற்கு முன்னதாக கடந்த ஜூன் மாதத்தில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக பெற்ற இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்திலான வெற்றி தான் பெரிய வெற்றியாக இருந்தது. இந்நிலையில், தற்போது அதை மிஞ்சிய வெற்றியை இந்திய அணி பதிவு செய்துள்ளது. 
 

click me!