பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு கிடைத்த கடைசி வாய்ப்பையும் தமிழ் தலைவாஸ் அணியானது கோட்டைவிட்ட நிலையில், புரோ கபடி லீக் தொடைரின் 10ஆவது சீசனிலிருந்து வெளியேறியுள்ளது.
புரோ கபடி லீக் தொடரின் 10ஆவது சீசன் இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், தமிழ் தலைவாஸ், யு மும்பா, தெலுகு டைட்டன்ஸ், யுபி யோத்தாஸ், பெங்களூரு புள்ஸ், தபாங் டெல்லி, பாட்னா பைரேட்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ் என்று 12 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன. நேற்று நடந்த தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையில் நடந்த போட்டிக்கு பிறகு புனேரி பல்தான், ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயிண்ட்ஸ் ஆகிய 4 அணிகள் தற்போது வரையில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இதில், புனேரி பல்தான் மற்றும் ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மட்டுமே அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன.
மேலும், தபாங் டெல்லி, குஜராத் ஜெயிண்ட்ஸ், பாட்னா பைரேட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ் ஆகிய 4 அணிகள் எலிமினேட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. பாட்னா பைரேட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், பெங்கால் வாரியர்ஸ் ஆகிய 3 அணிகளுக்கு இடையில் பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டி ஏற்பட்டுள்ளது. இதில், பாட்னாவிற்கு 2, ஹரியானாவிற்கு 4 மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு 3 போட்டிகள் எஞ்சியுள்ளன. இதில், பெங்கால் வாரியர்ஸ் 3 போட்டியிலும் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். அதோடு, ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியானது 4 போட்டியிலும் தோல்வி அடைந்தால் பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு தான் பிளே ஆஃப் வாய்ப்பு கிடைக்கும்.
தமிழ் தலைவாஸ் அணிக்கு கிடைத்த கடைசி வாய்ப்பையும் கோட்டைவிட்டுள்ளது. புனேரி பல்தான் அணிக்கு எதிராக நடந்த 115 ஆவது போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியானது 26 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக கடைசியாக கிடைத்த பிளே ஆஃப் வாய்ப்பையும் இழந்து புரோ கபடி லீக் தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறியுள்ளது. இதற்கு முன்னதாக யுபி யோதாஸ், தெலுகு டைட்டன்ஸ், பெங்களூரு புல்ஸ், யு மும்பா ஆகிய அணிகள் புரோ கபடி லீக் தொடரிலிந்து வெளியேறின என்பது குறிப்பிடத்தக்கது.