சாஸ்திரியும் கோலியும் சொல்றததான் கேட்கணும்.. அது அவங்க தலையெழுத்து!! தேர்வுக்குழுவை தெறிக்கவிட்ட முன்னாள் வீரர்

By karthikeyan VFirst Published Oct 9, 2018, 5:19 PM IST
Highlights

இந்திய அணி தேர்வுக்குழு மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து முன்னாள் வீரர் இந்திய வீரர் சையத் கிர்மானி கருத்து தெரிவித்துள்ளார்.
 

இந்திய அணி தேர்வுக்குழு மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து முன்னாள் வீரர் இந்திய வீரர் சையத் கிர்மானி கருத்து தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த கருண் நாயருக்கு ஒரு போட்டியில் கூட அணியில் ஆட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதுவே பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அந்த தொடரில் ஆடுவதற்கே வாய்ப்பு வழங்கப்படாத கருண் நாயர், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் புறக்கணிக்கப்பட்டார். 

வாய்ப்பே கொடுக்காமல் கருண் நாயர் அணியிலிருந்து நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஹர்பஜன் சிங், வீரர்கள் தேர்வு எதனடிப்படையில் நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை என்று பகிரங்கமாக தேர்வுக்குழுவுக்கு எதிராக கருத்து தெரிவித்தார். கருண் நாயரும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். இதுதொடர்பாக கருண் நாயரிடம் தேர்வுக்குழு சார்பில் விளக்கமளிக்கபட்டதாக தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்தும் தெரிவித்திருந்தார். 

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் சரியாக ஆடாததால் அந்த தொடரின் எஞ்சிய போட்டிகளிலிருந்து நீக்கப்பட்ட முரளி விஜயும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம்பெறவில்லை. அதனால் அதிருப்தியில் இருந்த முரளி விஜய், இங்கிலாந்து தொடரில் அணியிலிருந்து நீக்கப்பட்தற்கு பிறகு தன்னை தேர்வுக்குழுவினர் தொடர்புகொள்ளவே இல்லை எனவும் அணி தேர்வு குறித்து ஹர்பஜன் சிங் தெரிவித்த கருத்துடன் உடன்படுவதாகவும் முரளி விஜய் பகிரங்கமாக தெரிவித்தார். 

முரளி விஜயின் குற்றச்சாட்டுக்கு தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கமளித்ததோடு, அதை மறுக்கவும் செய்தார். மேலும் முரளி விஜயை தேர்வுக்குழு உறுப்பினர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசியதாகவும், முரளி விஜயின் குற்றச்சாட்டு ஆச்சரியமளிப்பதாகவும் தெரிவித்தார். 

தேர்வுக்குழுவை விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்த இருவரிடமும் இதுதொடர்பாக விசாரிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. 

இந்நிலையில், அணி தேர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சையத் கிர்மானி, என்னைக் கேட்டால் அணியை தேர்வு செய்வதே பயிற்சியாளர் ரவி சாஸ்திரியாகத்தான் இருக்கும். பயிற்சியாளர் என்ற முறையில் அவரும் கேப்டனும் கலந்தாலோசித்து முடிவை தேர்வுக்குழுவிடம் தெரிவிப்பர். இப்போது இருக்கும் தேர்வுக்குழுவால் சாஸ்திரியும் கோலியும் அணி நிர்வாகமும் சொல்வதை கேட்டு அதன்படி மட்டுமே செயல்பட முடியும். ஏனென்றால் தேர்வுக்குழுவில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், சாஸ்திரி மற்றும் கோலியை விட மிக மிக அனுபவம் குறைந்தவர்கள். அதனால் அவர்களுக்கும் வேறு வழியில்லை. சாஸ்திரியும் கோலியும் சொல்வதை கேட்டுத்தான் செயல்பட முடியும்.

தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் வெறும் 6 டெஸ்ட் மற்றும் 17 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். சரண்தீப் சிங் 2 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார். தேவாங் காந்தி(4 டெஸ்ட், 3 ஒருநாள்), ஜதீன் பரஞ்பே(4 ஒருநாள்), ககன் கோடா(2 ஒருநாள்). தேர்வுக்குழுவில் இருக்கும் இவர்கள் அனைவருமே அனுபவம் குறைவானவர்கள். அதனால் அனுபவம்மிக்க சாஸ்திரி மற்றும் கோலியை மீறி இவர்களால் செயல்பட முடியாது என சையத் கிர்மானி தெரிவித்துள்ளார். 
 

click me!