
இந்திய அணியின் கேப்டனாக தோனி இருந்தபோது, அவரது தளபதியாக இருந்தவர் சுரேஷ் ரெய்னா. சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன், சூப்பர் ஃபீல்டர், நல்ல ஸ்பின்னரும் கூட. ஆனாலும் கடந்த ஓராண்டாக இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இந்திய அணியில் இடம்பெறுவதற்கான யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெறாததே ரெய்னா, தேர்வு செய்யப்படாததற்கு காரணம் என கூறப்பட்ட நிலையில், அண்மையில் அந்த டெஸ்டில் தேறினார். எனினும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரெய்னா சேர்க்கப்படவில்லை. ஆனால் டி 20 தொடரில் ரெய்னா உள்ளார்.
மீண்டும் ஒருநாள் அணியில் இடம்பெறும் நம்பிக்கையில் உள்ளார் ரெய்னா. ரெய்னாவின் நம்பிக்கை விரைவில் நிறைவேற வாய்ப்புள்ளது. உலக கோப்பைக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். ஆனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சொதப்பல் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ரெய்னாவின் முக்கியத்துவத்தையும் உணர்த்துவதாக உள்ளது.
டிராவிட், லட்சுமணன், யுவராஜ், ரெய்னா என கடந்த காலங்களில் இந்திய அணி மிடில் ஆர்டரில் சிறந்து விளங்கியது. டாப் ஆர்டர்கள் சொதப்பினால் கூட மேட்ச்சை தூக்கி நிறுத்தக்கூடிய வகையிலான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை கொண்டிருந்த இந்திய அணி, தற்போது மிடில் ஆர்டரில் திணறிவருகிறது.
ரோஹித், தவான், கோலி, ரஹானே என முதல் நான்கு இடங்கள் உறுதிப்படுத்தப்பட்டவை. தோனி, பாண்டியா முறையே 6 மற்றும் 7வது இடங்களில் களமிறங்குவர். இடையில் இருக்கும் 5வது இடத்திற்குத்தான் கடும் போட்டி நிலவுகிறது.
ரெய்னா ஓரங்கட்டப்பட்ட நிலையில், கேதர் ஜாதவ், மனீஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது.
ஷ்ரேயாஸ் ஐயர்:
ஷ்ரேயாஸ் ஐயரை பொறுத்தவரை ஃபீல்டிங்கில் மிகவும் சொதப்புகிறார். சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கு அவர் புதிது என்றாலும் இப்படிப்பட்ட ஃபீல்டிங்கை வைத்துக்கொண்டு உலக கோப்பையை வெல்வது கடினம். அவருக்கு பவுலிங்கும் போட தெரியாது.
தினேஷ் கார்த்திக்:
தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு அளிக்கப்படுவது கடினமே.
மனீஷ் பாண்டே:
சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் ஃபீல்டர். ஆனால் பவுலிங் போட மாட்டார். பகுதிநேர பந்துவீச்சாளரும் தேவைப்படும் நிலையில், பந்துவீச தெரிந்திருப்பதும் அவசியமாக உள்ளது.
கேதர் ஜாதவ்:
கேதர் ஜாதவ் பேட்டிங், பீல்டிங், பவுலிங் என அனைத்திலுமே ஓரளவிற்கு பங்களிப்பை அளிக்கிறார்.
இவர்கள் 4 பேருக்கும் இடையேதான் மிடில் ஆர்டரில் 5வது இடத்திற்கு கடும் போட்டி நிலவுகிறது. 5வது இடத்தில் பேட்டிங் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடம். அந்த இடத்தில் இறங்கி சிறப்பாக பேட்டிங் ஆடுவது என்பது அனைவருக்கும் எளிதாக வந்துவிடாது.
தற்போதைய இந்திய அணியில், புவனேஷ், பும்ரா, பாண்டியா, சாஹல், குல்தீப் ஆகிய 5 பவுலர்களை கொண்டே இந்திய அணி பந்துவீசுகிறது. கூடுதலாக பகுதிநேர பந்துவீச்சாளர் ஒருவர் கூட இல்லை. மிடில் ஓவர்களில் பந்துவீச பகுதிநேர பவுலர் ஒருவர் தேவை. அதைக் கருத்தில் கொண்டால், மனீஷ், ஷ்ரேயாஸ், தினேஷ் கார்த்திக் ஆகிய மூவரும் அடிபட்டுவிடுவர்.
மீதமிருப்பது ரெய்னாவும் ஜாதவும். ஜாதவை விட ஃபீல்டிங்கில் சிறந்தவர் ரெய்னா. மேலும் 2 உலக கோப்பைகளில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர். பகுதிநேர பவுலராக இருந்தாலும் விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடியவர்.
எனவே திணறிவரும் 5வது இடத்திற்கு அனைத்து வகையிலும் ரெய்னா தகுதியானவராகவே இருப்பார். எனவே 2019 உலக கோப்பையில் அணியில் ரெய்னா இடம்பெறுவது அவசியமானதாகும்.
இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு ரெய்னா அணியில் இடம்பெறுகிறாரா என்பதை பார்ப்போம்..
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.