
இந்திய அணியின் கேப்டனாக தோனி இருந்தபோது, அவரது தளபதியாக இருந்தவர் சுரேஷ் ரெய்னா. சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன், சூப்பர் ஃபீல்டர், நல்ல ஸ்பின்னரும் கூட. ஆனாலும் கடந்த ஓராண்டாக இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இந்திய அணியில் இடம்பெறுவதற்கான யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெறாததே ரெய்னா, தேர்வு செய்யப்படாததற்கு காரணம் என கூறப்பட்ட நிலையில், அண்மையில் அந்த டெஸ்டில் தேறினார். எனினும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரெய்னா சேர்க்கப்படவில்லை. ஆனால் டி 20 தொடரில் ரெய்னா உள்ளார்.
இந்த தொடரில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மொத்தமாக சொதப்பினர். இவர்களின் இந்த சொதப்பல், ரெய்னாவுக்கு மீண்டும் ஒருநாள் அணியில் இடம் கிடைக்க வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தென்னாப்பிரிக்கா சென்றுள்ள சுரேஷ் ரெய்னா, தனக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது குறித்து வேதனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள ரெய்னா, நன்றாக விளையாடியும் இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டபோது மிகவும் வருத்தமாக இருந்தது. அந்த தருணத்தில் எனது குடும்பம்தான் எனக்கு ஆதரவாக இருந்தது. எப்போதும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் கவனமாக இருப்பேன். ஆனால் காயம் காரணமாக கண்டுகொள்ளாமல் விட்டது தவறாகிவிட்டது.
உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி, யோ-யோ டெஸ்டிலும் தேர்வாகிவிட்டேன். இப்போது இந்திய அணிக்காக மீண்டும் விளையாட இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். இந்த மூன்று டி20 போட்டியிலும் சிறப்பாக ஆடுவேன். தற்போது மிடில் ஆர்டர் குறித்த பேச்சு அடிபடுகிறது. 4வது இடத்தில் இறங்கி நிலைத்து ஆடுவது என்பது சாதாரண விஷயமல்ல. எனது பேட்டிங் ஸ்டைலுக்கு நான் 4 அல்லது 5வது இடத்திற்கு தகுதியானவன் என நினைக்கிறேன். அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் உலக கோப்பையில் ஆட வேண்டும் என்பது எனது ஆசை. ஆடுவேன் என நம்புகிறேன் என ரெய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.