ஐபிஎல் போட்டியை ஒளிபரப்பும் உரிமையை ரூ.16 ஆயிரத்து 347 கோடிக்கு வாங்கியது ஸ்டார் இந்தியா…

First Published Sep 5, 2017, 9:42 AM IST
Highlights
Star India has bought the rights to broadcast the IPL for Rs. 16347 crores.


ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்பும் உரிமையை ஸ்டார் இந்தியா தொலைக்காட்சி நிறுவனம் ரூ.16 ஆயிரத்து 347 கோடிக்கு வாங்கியுள்ளது.

ஐபிஎல் போட்டியை தொலைக்காட்சிகளில் மட்டும் பத்து ஆண்டுகளுக்கு ஒளிபரப்பும் உரிமையை கடந்த 2008-ஆம் ஆண்டு சோனி தொலைக்காட்சி நிறுவனம் ரூ.8 ஆயிரத்து 200 கோடி கொடுத்து வாங்கியிருந்தது.

தற்போது ஸ்டார் இந்தியா ஒளிபரப்பு உரிமத்தை வாங்கியுள்ள தொகையின்படி, 5 ஆண்டுகளிலேயே மேற்கண்ட தொகையின் இரட்டிப்பு மதிப்பை பிசிசிஐ வருமானமாக பெற்றுவிடும்.

அதாவது ஐபிஎல் போட்டி ஒளிபரப்பு உரிமத்தின் மூலம் பிசிசிஐக்கு சராசரியாக ஆண்டுதோறும் ரூ.3 ஆயிரத்து 270 கோடி வருவாயாக கிடைக்கும்.

இந்திய அணி விளையாடும் சர்வதேச கிரிக்கெட் ஆட்டத்தின் ஒளிபரப்பு உரிமத்தின் மூலம் பிசிசிஐக்கு ரூ.43 கோடி மட்டுமே வருவாயாக கிடைக்கும் நிலையில், ஐபிஎல் போட்டியின் ஒரு ஆட்டத்தின் ஒளிபரப்பு உரிமத்தின் மூலம் ரூ.55 கோடி வருவாயாக கிடைக்கும்.

இந்த உரிமத்தை ஏலத்தில் எடுத்துள்ளதன் மூலம், ஸ்டார் இந்தியா நிறுவனமானது இந்தியா, அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகளில் ஐபிஎல் போட்டியை ஒளிபரப்ப அதிகாரம் பெற்றுள்ளது.

தொலைக்காட்சியில் மட்டுமல்லாது, செல்லிடப்பேசி செயலிகள், இணைதளம் ஆகியவற்றின் வழியேவும் ஐபிஎல் போட்டியை வழங்க இயலும்.

முன்பு இந்த ஒளிபரப்பு உரிமத்தை பெற்றிருந்த சோனி நிறுவனம், இந்த முறை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பும் உரிமத்துக்கு மட்டும் ரூ.11 ஆயிரத்து 50 கோடிக்கு ஏலம் கோரியிருந்தது.

ஆனால், அந்த உரிமத்துக்கு ஸ்டார் இந்தியா நிறுவனம் ரூ.6 ஆயிரத்து 196 கோடிக்கு மட்டுமே ஏலம் கோரியிருந்தது.

tags
click me!