
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 239 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.
இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை, 79.1 ஓவர்களில் 205 ஓட்டங்களுக்கு சுருண்டது.
அந்த அணியில் கேப்டன் தினேஷ் சண்டிமல் 57 ஓட்டங்கள், கருணாரத்னே 51 ஓட்டங்கள் எடுத்தனர்.
இந்திய வீரர் அஸ்வின் 4, இஷாந்த் சர்மா, ரவீந்திர ஜடேஜா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் முரளி விஜய் 128 ஓட்டங்கள், சேதேஷ்வர் புஜாரா 143 ஓட்டங்கள், ரோஹித் சர்மா ஆகியோர் சதம் அடிக்க, கேப்டன் விராட் கோலி இரட்டைச் சதம் 213 ஓட்டங்கள் விளாசி அணியின் ஸ்கோரை உச்சிக்கு இட்டுச் சென்றனர்.
மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை இந்தியா 176.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 610 ஓட்டங்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்வதாக கேப்டன் கோலி அறிவித்தார்.
அப்போது, ரோஹித் சர்மா 102 ஓட்டங்கள், ரித்திமான் சாஹா 1 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இலங்கை தரப்பில் தில்ருவன் பெரேரா 3 விக்கெட்டுகளும், கமகே, ஷனகா, ஹெராத் தலா ஒரு விக்கெட்டும் எடுத்திருந்தனர்.
பின்னர், முதல் இன்னிங்ஸில் 405 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை ஆட்ட முடிவில் 9 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 21 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இந்த நிலையில், 4-வது நாளான நேற்று கருணாரத்னே 11 ஓட்டங்கள், திரிமானி 9 ஓட்டங்களுடன் தொடங்கினர்.
நேற்றைய ஆட்டத்தில் இலங்கை தனது விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து தோல்விக்கு தள்ளப்பட்டது. கருணாரத்னே 18 ஓட்டங்கள், திரிமானி 23 ஓட்டங்களில் வீழ்ந்தனர்.
அதனைத் தொடர்ந்து வந்த மேத்யூஸ் 10 ஓட்டங்களில் வெளியேற, 63 பந்துகளில் அரைசதம் கடந்த சண்டிமல் மட்டும் அதிகபட்சமாக 61 ஓட்டங்கள் எடுத்தார்.
ஷனகா 17 ஓட்டங்களில் பெவிலியன் திரும்ப, பெரேரா, ஹெராத், கமகே டக் ஔட் ஆகினர். இறுதியாக சுரங்கா லக்மல் 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய பந்துவீச்சாளர்களில் அஸ்வின் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இஷாந்த் சர்மா, ஜடேஜா, உமேஷ் யாதவ் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
இந்திய கேப்டன் விராட் கோலி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இலங்கைக்கு எதிரான இந்த வெற்றியின்மூலம் மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.