ஒரு நாள் தொடரில் 5 ஆட்டங்களையும் வென்ற தென் ஆப்பிரிக்கா…

Asianet News Tamil  
Published : Oct 15, 2016, 05:02 AM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
ஒரு நாள் தொடரில் 5 ஆட்டங்களையும் வென்ற தென் ஆப்பிரிக்கா…

சுருக்கம்

 

கேப்டவுன், 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டியிலும் தென் ஆப்பிரிக்க அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று  5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியது.

ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடியது. இதில் முதல் 4 ஒருநாள் போட்டியிலும் தென் ஆப்பிரிக்க அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்று இருந்தது.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நேற்று முன்தினம் பகல்-இரவு ஆட்டமாக நடந்தது.

‘டாஸ்’ ஜெயித்த தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 52 ரன்களுக்குள் முதல் 3 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி தொடக்கம் கண்டது. தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டீ காக் 12 ரன்னிலும், ஹசிம் அம்லா 25 ரன்னிலும், கேப்டன் பாப் டுபிளிஸ்சிஸ் 11 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

4-வது விக்கெட்டுக்கு டுமினி, ரோசோவ்வுடன் இணைந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டது. அணியின் ஸ்கோர் 230 ரன்னாக உயர்ந்த போது இந்த இணை பிரிந்தது. டுமினி 75 பந்துகளில் 8 பவுண்டரியுடன் 73 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 4-வது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 178 ரன்கள் திரட்டினார்கள். 3-வது சதத்தை பதிவு செய்த ரோசோவ் 118 பந்துகளில் 14 பவுண்டரி, 2 சிக்சருடன் 122 ரன்கள் எடுத்து ‘அவுட்’ ஆனார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் குவித்தது. ரபடா 9 ரன்னுடனும், ஸ்டெயின் 6 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் கிறிஸ் டெமைன், ஜோ மென்னி தலா 3 விக்கெட்டும், ஸ்காட் போலன்ட் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 328 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் ஆரம்பம் முதலே அடித்து விளையாடி அணியை வெற்றியை நோக்கி முன்னெடுத்து செல்ல முயற்சித்தார். ஆனால் அவரது இந்த சிறப்பான முயற்சிக்கு பலன் இல்லாமல் போனது. அவருடன் இணைந்த எந்த வீரரும் நிலைத்து நின்று ஆடவில்லை. நிலைத்து நின்று ஆடி 9-வது சதம் கண்ட டேவிட் வார்னர் 136 பந்துகளில் 24 பவுண்டரியுடன் 173 ரன்கள் எடுத்து 9-வது விக்கெட்டாக வீழ்ந்தார். வார்னர் இரண்டாவது ரன்னுக்காக ஓடுகையில் இம்ரான் தாஹிர் பவுண்டரி எல்லையில் இருந்து வீசிய பந்தை விக்கெட் கீப்பர் குயின்டன் டீ காக் துரிதமாக பிடித்து அவரை ரன்-அவுட் செய்து ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி அளித்தார். அத்துடன் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி நம்பிக்கையும் பட்டு போனது.

48.2 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 296 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டேவிட் வார்னரின் சதம் வீணானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் கைல் அப்போட், ரபடா, இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். 173 ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த போட்டி தொடரில் மொத்தம் 311 ரன்கள் எடுத்த தென் ஆப்பிரிக்க வீரர் ரோசோவ் தொடர்நாயகன் விருதை தனதாக்கினார்.

இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி, ஆஸ்திரேலியாவை வெளுத்து வாங்கி 5-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியது. 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் ஒரு ஆட்டத்தில் கூட வெற்றி பெற முடியாமல் ஆஸ்திரேலிய அணி தோல்வியை தழுவியது அந்த நாட்டு இரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Virat Kohli: 'இந்த குணம் என்னை விட்டு எப்போதும் போகாது'.. வெளிப்படையாக போட்டு உடைத்த விராட் கோலி!
Virat Kohli Retirement Date: விராட் கோலியின் ஓய்வு தேதி இதுதானா? 2027 உலகக்கோப்பை குறித்து அவரே சொன்ன தகவல்