ஆஸ்திரேலியாவுக்கு அடுத்த அடி!! தெறிக்கவிட்ட தென்னாப்பிரிக்கா

By karthikeyan VFirst Published Nov 11, 2018, 5:10 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை தென்னாப்பிரிக்க அணி வென்றுள்ளது. 
 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை தென்னாப்பிரிக்க அணி வென்றுள்ளது. 

ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் தொடர் தோல்விகளை சந்தித்துவரும் ஆஸ்திரேலிய அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்துள்ளது. 

தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றிருந்தன. 

மூன்றாவது போட்டி இன்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணியின் முதல் மூன்று விக்கெட்டுகள் தொடக்கத்திலேயே சரிந்துவிட்டாலும், நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டுபிளெசிஸ் மற்றும் டேவிட் மில்லர் ஜோடி அபாரமாக ஆடி ரன்களை குவித்தது. இருவரும் சிறப்பாக ஆடி சதமடித்தனர். நான்காவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 252 ரன்களை குவித்தது. டுபிளெசிஸ் மற்றும் மில்லரின் சதத்தால் தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 320 ரன்களை குவித்தது. 

321 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியும் முதல் மூன்று விக்கெட்டுகளை சொற்ப ரன்களுக்கு இழந்தது. ஃபின்ச், லின், டிராவிஸ் ஹெட் ஆகிய மூவரும் தொடக்கத்திலேயே ஆட்டமிழந்தனர். எனினும் ஷான் மார்ஷ் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகிய இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்டனர். எனினும் இந்த பார்ட்னர்ஷிப் நீடிக்கவில்லை. ஸ்டோய்னிஸ் 63 ரன்களில் ஆட்டமிழக்க, அபாரமாக ஆடி சதமடித்த ஷான் மார்ஷ் 106 ரன்களில் ஆட்டமிழந்தார். அலெக்ஸ் கேரியும் மேக்ஸ்வெல்லும் ஆஸ்திரேலிய அணியை வெற்றியை நோக்கி அழைத்து செல்வர் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதையடுத்து 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணியால் 280 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதையடுத்து 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி, ஒருநாள் தொடரை 2-1 என வென்றது. தொடர் தோல்விகளை சந்தித்துவரும் ஆஸ்திரேலிய அணி, மீண்டும் ஒரு தோல்வியை சொந்த மண்ணில் வாங்கி கட்டியுள்ளது. 
 

click me!