துயரிலிருந்து மீண்டு வந்து துவம்சம் செய்த ஸ்மித்..!

First Published Jun 29, 2018, 10:10 AM IST
Highlights
smith played well in canada global t20


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித், வார்னர் ஆகிய இருவருக்கும் ஓராண்டு தடையும், பான்கிராஃப்டுக்கு 9 மாத தடையும் விதிக்கப்பட்டது. 

தவறை உணர்ந்து ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய இருவரும் மனம் வருந்தி கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டனர். எனினும் அவர்களை ஆஸ்திரேலிய ஊடகங்கள் விட்டுவைக்கவில்லை. இருவரையும் கடுமையாக விமர்சித்து எழுதியது. 

ஓராண்டு தடை விதிக்கப்பட்டதால், ஐபிஎல் போட்டிகளில் ஸ்மித்தும் வார்னரும் ஆடவில்லை. சமகால கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களில் ஒருவரான ஸ்மித்திற்கு இது சோதனைக்காலம் தான். இந்த தடை இல்லாமல் இருந்திருந்தால், அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளை குவித்திருக்க கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கும். சாதனை ஒருபுறமிருக்க, அவரது மொத்த இமேஜையும் ஊடகங்கள் சிதைத்துவிட்டன. இது ஸ்மித்திற்கு மிகப்பெரிய இழப்புதான். 

எனினும் உள்ளூர் போட்டிகள் மற்றும் லீக் போட்டிகளில் ஆடலாம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதையடுத்து வார்னர் கரீபியன் பிரீமியர் லீக் தொடர்களில் ஆட உள்ளார். ஸ்மித், கனடாவில் நடந்துவரும் குளோபல் டி20 தொடரில் ஆடிவருகிறார். இந்த தொடரில் டேரன் சமி கேப்டனாக உள்ள டொரண்டோ நேஷனல்ஸ் அணிக்காக ஸ்மித் ஆடிவருகிறார்.

இந்த தொடரின் முதல் போட்டியில் சமி தலைமையிலான டொரண்டோ நேஷனல்ஸ் அணியும் கிறிஸ் கெய்ல் தலைமையிலான வான்கூவர் நைட்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டொரண்டோ நேஷனல்ஸ் அணி முதலில் பந்துவீசியது. 

முதலில் பேட்டிங் ஆடிய வான்கூவர் நைட்ஸ் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான கெய்ல் 17 ரன்களில் அவுட்டானார். ஆனால் மற்றொரு தொடக்க வீரர் லெவிஸ் மற்றும் நடுவரிசை வீரர் ஆண்ட்ரே ரசல் ஆகியோரின் அதிரடியில் அந்த அணி 20 ஓவர் முடிவில் 227 ரன்களை குவித்தது. லெவிஸ் 96 ரன்கள் குவித்தார். 20 பந்துகளில் ரசல் 54 ரன்களை குவித்தார். 

228 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய டொரண்டோ நேஷனல்ஸ் அணியின் தொடக்க வீரர் நிசாகத் கான் 6 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய ஸ்மித், தனது திறமையை மீண்டும் ஒருமுறை இந்த உலகிற்கு பறைசாற்றும் வகையில், சிறப்பாக ஆடி, அணியை மீட்டெடுத்தார். 61 ரன்கள் குவித்து ஸ்மித் அவுட்டானார். சார்லஸுடனும் டேவ்கிச்சுடனும் அவர் அமைத்து கொடுத்த பார்ட்னர்ஷிப் அணிக்கு தேவையான ஒன்று. 

டேவ்கிச் அதிரடியாக ஆடி 92 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற செய்தார். டொரண்டோ நேஷனல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தனது கிரிக்கெட் வாழ்வில் குத்தப்பட்ட கரும்புள்ளியால், மிகவும் மன உளைச்சலில் இருந்த ஸ்மித், அதிலிருந்து மீண்டு வந்து மீண்டும் சிறப்பாக ஆடி, தனது அணி வெற்றி பெற காரணமாக இருந்திருப்பது அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு ஓரளவிற்கு ஆறுதலாக அமைந்துள்ளது. 
 

click me!