
இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவின் தோல்விகள் எதுவும் அவருக்கான பின்னடைவு கிடையாது என்று சிந்துவின் பயிற்சியாளர் பி.கோபிசந்த் கூறினார்.
உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்று வரை முன்னேறிய சிந்து, அதில் ஜப்பானின் நஜோமி ஒகுஹராவிடம் தோல்வி அடைந்தார்.
ஹாங்காங் ஓபன் பாட்மிண்டனில் உலகின் முதல் நிலை வீராங்கனையான டாய் ஸு யிங்கிடம் வீழ்ந்தார்.
துபை சூப்பர் சீரிஸில் உலகின் 2-ஆம் நிலையில் உள்ள அகானே யமாகுசியால் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
சிந்துவின் இந்த தொடர் தோல்விகள் குறித்து கோபிசந்த் கூறியது: "வளர்ச்சி இருக்கும் பட்சத்தில் தோல்விகள் குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை.
உலகின் முதல் நிலை மற்றும் 3-ஆம் நிலை வீராங்கனைகள் குறித்து பேசுகிறோம். எப்போதுமே உலகின் முதல்நிலை வீராங்கனைகள் நம் நாட்டிலிருந்து மட்டுமே உருவாக வேண்டும் என்பதில்லை.
டாய் ஸு யிங் சிறப்பாக விளையாடுகிறார். ஆனால் சிந்து ஒலிம்பிக் போட்டியில் அவரை வீழ்த்தியதை கவனத்தில் கொள்ள வேண்டும். அவர் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்று வரை முன்னேறினார். 2-ஆம் இடத்தில் இருப்பது சிறப்பல்ல என்று பலர் கூறலாம். என்னைப் பொருத்த வரையில் நேர்மறையாக சிந்திக்க வேண்டும்.
சிந்துவின் போட்டி முடிவுகள் திருப்தி அளிக்கின்றன. அவரது தோல்விகள் அவருக்கான பின்னடைவு என ஒரு சதவீதம் கூட கருதவில்லை.
கோல்ட் கோஸ்டில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி, ஜகார்த்தாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டி, உலக சாம்பியன்ஷிப் போட்டிகளே எனது முக்கிய நோக்கமாகும்.
போட்டிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். ஆனால், நமது வீரர்கள் பெரிய அளவிலான போட்டிகளில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே முக்கியம்.
இந்திய பாட்மிண்டனில் வீரர்களுக்கு பஞ்சமில்லை. நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நிலையான வீரர்களை உருவாக்க சிறந்த கட்டமைப்பும், பயிற்சியாளர்களும் அவசியமாகும்" என்று அவர் தெரிவித்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.