
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம் அடைந்தனர்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.
மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், சுவிட்சர்லாந்தின் இளம் வீராங்கனையான பெலின்டா பென்சிக்கை எதிர்கொண்டார்.
79 நிமிடங்களில் முடிவுக்கு வந்த இந்த ஆட்டத்தில் 6-4, 6-3 என்ற நேர் செட்களில் பென்சிக்கை செரீனா வெளியேற்றினார்.
ஓபன் எரா கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் செரீனா, தற்போது 22 முறை பட்டம் வென்று, ஜெர்மனியின் முன்னாள் வீராங்கனை ஸ்டெஃபி கிராஃபின் சாதனையை சமன் செய்துள்ளார்.
இந்த முறை அவர் பட்டம் வென்றால், ஸ்டெஃபி கிராஃபின் சாதனையை முறியடிப்பதோடு, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் 7 முறை மகுடம் சூடிய பெருமையையும் பெறுவார். இந்தப் போட்டியின்போது, செரீனாவின் வருங்கால கணவர் அலெக்ஸிஸ் ஒஹானியன் பார்வையாளர் அரங்கிலிருந்து செரீனாவை உற்சாகப்படுத்தினார்.
19 வயது வீராங்கனையான பெலின்டா பென்சிக், கடந்த 2015-இல் டொரண்டோ அரையிறுதியில் செரீனாவை வெளியேற்றியது நினைவு கூரத்தக்கது.
செரீனா, 2-ஆவது சுற்றில் செக் குடியரசின் லூசி சஃபரோவாவை எதிர்கொள்கிறார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.