தமிழக வீரரின் உலக கோப்பை கனவு தகர்ந்தது.. காத்திருந்த கார்த்திக்கிற்கு கடும் ஆப்பு

By karthikeyan VFirst Published Feb 16, 2019, 11:14 AM IST
Highlights

நீண்ட நெடிய அனுபவம் கொண்ட தினேஷ் கார்த்திக்கின் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது என்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளது தேர்வுக்குழு.
 

நீண்ட நெடிய அனுபவம் கொண்ட தினேஷ் கார்த்திக்கின் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது என்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளது தேர்வுக்குழு.

2004ம் ஆண்டே இந்திய அணியில் அறிமுகமான தினேஷ் கார்த்திக், அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் தவித்துவருகிறார். இந்திய அணியில் அறிமுகமாகி 15 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் வெறும் 91 ஒருநாள் போட்டிகளிலும் 26 டெஸ்ட் போட்டிகளிலும் மட்டுமே ஆடியுள்ளார்.

அவ்வப்போது அணியில் சேர்க்கப்படுவதும் நீக்கப்படுவதுமாகவே இருந்தார். அவரும் தொடர்ச்சியாக இந்திய அணியில் தனக்கான இடத்திற்காக காத்து கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு அணியில் நிரந்தர இடம் கிடைக்கவில்லை.

தனக்கான அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் தேடிக்கொண்டிருந்த தினேஷ் கார்த்திக், கடந்த  ஆண்டு நடந்த நிதாஹஸ் டிராபி டி20 தொடரின் இறுதி போட்டியில் கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி இந்திய அணியை திரில் வெற்றி பெற செய்தார். அதன்பிறகு தொடர்ச்சியாக டி20 அணியில் தினேஷ் கார்த்திக் எடுக்கப்பட்டார்.

உலக கோப்பையை மனதில் வைத்து இந்திய அணியின் மிடில் ஆர்டர் சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் தினேஷ் கார்த்திக்கிற்கும் அணியில் இடமளிக்கப்பட்டது. தினேஷ் கார்த்திக், அவருக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி நன்றாக ஆடியிருந்தாலும் என்றும் மறக்காமல் நினைவில் கொள்ளும் அளவிற்கான முக்கியமான இன்னிங்ஸ் என்று எதையும் ஆடவில்லை. ஃபினிஷர் வேலையை மட்டுமே செய்தார்.

அதுமட்டுமல்லாமல் உலக கோப்பையில் ரிஷப் பண்ட் கண்டிப்பாக ஆடும் சூழல் உருவானதால் தினேஷ் கார்த்திக்கிற்கான தேவை இல்லாமல் போய்விட்டது. மிடில் ஆர்டரில் தோனியை தவிர ராயுடு, கேதர், ரிஷப் என நீண்ட பேட்டிங் வரிசை உள்ளது. 

உலக கோப்பை அணிக்கான முன்னோட்டமாக பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய தொடரில் தினேஷ் கார்த்திக் புறக்கணிக்கப்பட்டுள்ளார். ரிஷப் பண்ட் அணியில் இணைந்துள்ளார். விஜய் சங்கருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆடும் லெவனில் இல்லாமல் பென்ச்சில் உட்கார வைக்கப்படுவதாக இருந்தால் கூட ஆல்ரவுண்டர் ஆப்சனாக இருக்கும் விஜய் சங்கரை அணியில் எடுத்துக்கொள்ளலாம் என்ற முடிவிற்கு அணி நிர்வாகம் வந்திருக்கலாம்.

அதுவும் ஆஸ்திரேலிய தொடரில் அவர் ஆடுவதை பொறுத்ததுதான். ஒருநாள் அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்ட தினேஷ் கார்த்திக், டி20 அணியில் இடம்பெற்றுள்ளார். இதன்மூலம் தினேஷ் கார்த்திக்கை அணி நிர்வாகம் ஒரு நல்ல டி20 வீரராக பார்க்கிறது என்பதை அறிய முடிகிறது. 

இந்திய ஒருநாள் அணியில் இதன்பிறகு தினேஷ் கார்த்திக் சேர்க்கப்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்பதை தேர்வுக்குழு மறைமுகமாக தெரிவித்துள்ளது. இளம் வீரர்கள் வரிசைகட்டி நிற்பதால் இனிமேல் தினேஷ் கார்த்திக் ஒருநாள் அணியில் இடம்பெற வாய்ப்பில்லை. 

தினேஷ் கார்த்திக் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர், தினேஷ் கார்த்திக்கின் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கை அஸ்தமனமாகிவிட்டதாகவே கருதுகிறார். மேலும் அவரை அணி நிர்வாகம் ஒரு டி20 வீரராக பார்ப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளார். 
 

click me!