ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் அணி அறிவிப்பு!! தூக்கி எறியப்பட்ட தமிழக வீரர்.. ரிசர்வ் தொடக்க வீரராக அணிக்கு திரும்பிய ராகுல்

By karthikeyan VFirst Published Feb 15, 2019, 5:44 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. 

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய சுற்றுப்பயணங்களை முடித்துவிட்டு நாடு திரும்பியுள்ள இந்திய அணி, அடுத்ததாக இந்தியாவிற்கு வரும் ஆஸ்திரேலிய அணியுடன் மோதுகிறது. 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 2 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்க உள்ளது. முதலில் டி20 தொடர் நடக்க உள்ளது. முதல் போட்டி வரும் 24ம் தேதியும் இரண்டாவது டி20 போட்டி வரும் 27ம் தேதியும் நடக்க உள்ளது. அதன்பிறகு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மார்ச் 2ம் தேதி முதல் மார்ச் 13ம் தேதி வரை நடக்க உள்ளது. 

இந்திய அணிக்கு உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடர் இதுதான் என்பதால், உலக கோப்பையை மனதில் வைத்து உலக கோப்பைக்கான பரிசீலனையில் உள்ள வீரர்கள் இத்தொடரில் பரிசோதிக்கப்பட உள்ளார்கள். ஆஸ்திரேலிய தொடருக்கான அணி தேர்வு குறித்து விவாதித்த தேர்வுக்குழு, பின்னர் ஒருநாள் அணியை அறிவித்தது. 

இந்த அணியில் ரிஷப் பண்ட் மற்றும் ஆல்ரவுண்டர் விஜய் சங்கருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தினேஷ் கார்த்திக் அதிரடியாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ராயுடு, கேதர், தோனி, ரிஷப் பண்ட் என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கான இடம் நிரம்பிவிட்டதால் தினேஷ் கார்த்திக்கிற்கான தேவை இல்லை. பென்ச்சில் அவருக்கு ஒதுக்கும் இடத்தை ஆல்ரவுண்டரான விஜய் சங்கருக்கு ஒதுக்கிவிடலாம் என்ற எண்ணத்தில் தினேஷ் கார்த்திக் புறக்கணிக்கப்பட்டுள்ளார். ஸ்பின் ஆல்ரவுண்டர் ஜடேஜாவிற்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை. கேதர் ஜாதவை பார்ட் டைம் ஸ்பின்னராக பயன்படுத்திவருவதால் ஜடேஜாவிற்கான தேவை அணியில் இல்லாமல் போய்விட்டது. 

காஃபி வித் கரன் நிகழ்ச்சி சர்ச்சையில் சிக்கி மீண்டு வந்துள்ள கேஎல் ராகுல், ரிசர்வ் தொடக்க வீரராக மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். ரஹானேவிற்கு வாய்ப்பிருப்பதாக தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்திருந்தார். ஆனால் ராகுலே மீண்டும் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். 

முதலிரண்டு போட்டிகளில் புவனேஷ்வர் குமாருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த போட்டிகளில் சித்தார்த் கவுல் இடம்பிடித்துள்ளார். கடைசி மூன்று போட்டிகளுக்கு புவனேஷ்வர் குமார் திரும்பிவிடுவார் என்பதால் அதில் கவுல் இல்லை. ஆஸ்திரேலிய தொடரில் ஓய்வளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மாவுக்கு ஓய்வளிக்கப்படவில்லை. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ஷிகர் தவான், ராயுடு, கேதர் ஜாதவ், தோனி(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, பும்ரா, ஷமி, சாஹல், குல்தீப் யாதவ், விஜய் சங்கர், ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், சித்தார்த் கவுல்.

கடைசி 3 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ஷிகர் தவான், ராயுடு, கேதர் ஜாதவ், தோனி(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, பும்ரா, புவனேஷ்வர் குமார், சாஹல், குல்தீப் யாதவ், விஜய் சங்கர், ரிஷப் பண்ட், ராகுல், ஷமி.
 

click me!