உங்களோட கோலியை ஒப்பிடுறாங்களேனு கேட்டதற்கு மாஸ்டர் பிளாஸ்டரின் மாஸ் பதில்!

By karthikeyan VFirst Published Nov 4, 2018, 12:47 PM IST
Highlights

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருடன் விராட் கோலியை ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் மாபெரும் பிரளயமே கிளம்பியுள்ள நிலையில், இந்த ஒப்பீடு குறித்து சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருடன் விராட் கோலியை ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் மாபெரும் பிரளயமே கிளம்பியுள்ள நிலையில், இந்த ஒப்பீடு குறித்து சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக திகழும் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்துவருகிறார். ரன் மெஷின் என்று அழைக்கப்படும் கோலி, சச்சின் டெண்டுல்கரின், அதிக ரன்கள், அதிக சதங்கள் ஆகிய சாதனைகளை முறியடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

விராட் கோலி மிகச்சிறந்த ஃபார்மில் இருப்பதால் ரன்களை குவித்துவருகிறார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மூன்று சதங்கள் விளாசினார். இந்நிலையில், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருடன் விராட் கோலி ஒப்பிடப்படுகிறார். ஆனால் வெவ்வேறு காலக்கட்டத்தில் ஆடிய வீரர்களை ஒப்பிடுவது அபத்தமாகும். 

அப்போதைய சூழல் வேறு; வீரர்கள் வேறு. இப்போதைய சூழலும் வீரர்களும் முற்றிலும் வேறுபட்டவர்கள். அப்படியிருக்கையில் வெவ்வேறு காலக்கட்டத்தில் ஆடிய வீரர்களை ஒப்பிடக்கூடாது என்பதுதான் நிதர்சனம். சச்சின் ஆடிய காலக்கட்டத்தில் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், கிளென் மெக்ராத், முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே, சமிந்தா வாஸ் போன்ற தலைசிறந்த அபாயகரமான பவுலர்கள் இருந்தார்கள். இவர்களை எல்லாம் சமாளித்து சச்சின் செய்த சாதனைகளை இன்றைய விராட் கோலியின் சாதனைகளையும் சச்சினுடன் விராட் கோலியையும் ஒப்பிடக்கூடாது.

 

ஆனால் சச்சினுடன் விராட் கோலி ஒப்பிடப்படுகிறார். இந்த ஒப்பீடுக்கு ஆதரவு தெரிவித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் சமூக வலைதளங்களில் பெரும் விவாதமே நடந்துவருகிறது. 

இந்நிலையில், இந்த ஒப்பீடு குறித்து கருத்து தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர், ஒரு பேட்ஸ்மேனாக கோலியின் வளர்ச்சி அபரிமிதமானது. கோலியிடம் ஒரு ஸ்பார்க் இருக்கிறது. கோலி இந்த காலம் மட்டுமல்லாது எல்லா காலத்துக்குமான சிறந்த வீரர்களில் ஒருவர். ஆனால் வெவ்வேறு காலக்கட்டத்தில் ஆடிய வீரர்களை ஒப்பிடக்கூடாது. அதனால் அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை. 1960, 70, 80கள் மற்றும் என் காலத்தில் வீசிய பவுலர்களுக்கும் இப்போதைய பவுலர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. 

அதுமட்டுமல்லாமல் இந்த தலைமுறை வீரர்கள் வேறுவிதமாக ஆடுகிறார்கள். விதிமுறைகள், தடைகள், ஆடுகளங்கள், பந்துகள் என அனைத்துமே முற்றிலும் மாறானவை. அப்போதெல்லாம் ஆஸ்திரேலிய மைதானங்களில் கான்கிரீட்டை தொட்டால்தான் பவுண்டரி. பிறகு அதெல்லாம் மாறிவிட்டது. எனவே வெவ்வேறு காலக்கட்டங்களில் ஆடிய வீரர்களை ஒப்பிடுவது என்பதே தவறான செயல் என்று சச்சின் டெண்டுல்கர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

click me!