திரும்பி வருகிறாரா டிவில்லியர்ஸ்..? ரசிகர்கள் உற்சாகம்...!

By karthikeyan VFirst Published Nov 4, 2018, 11:35 AM IST
Highlights

அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ், மீண்டும் தென்னாப்பிரிக்க அணியில் ஆட உள்ளதாக தகவல்கள் வைரலாக பரவிவரும் நிலையில், அதுதொடர்பாக டிவில்லியர்ஸ் விளக்கமளித்துள்ளார்.

அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ், மீண்டும் தென்னாப்பிரிக்க அணியில் ஆட உள்ளதாக தகவல்கள் வைரலாக பரவிவரும் நிலையில், அதுதொடர்பாக டிவில்லியர்ஸ் விளக்கமளித்துள்ளார். 

தென்னாப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ், கடந்த 2004ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடி தனி முத்திரை பதித்தார். 

இவரது அதிரடி ஆட்டத்துக்கு பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. தென்னாப்பிரிக்காவைக் கடந்து சர்வதேச அளவில் டிவில்லியர்ஸ் ரசிகர்களை பெற்றுள்ளார். இந்தியாவில் டிவில்லியர்ஸுக்கு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்துகளை பறக்கவிடுவதால், 360 டிகிரி என வர்ணிக்கப்படுபவர் டிவில்லியர்ஸ். ஐபிஎல்-லில் பெங்களூரு அணிக்காக ஆடிவருகிறார். 

டிவில்லியர்ஸின் கேப்டன்சியில், 2015 உலக கோப்பையை தென்னாப்பிரிக்கா தான் வெல்லும் என சர்வதேச அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பாராத விதமாக அரையிறுதி போட்டியில் நியூசிலாந்திடம் தோற்று தென்னாப்பிரிக்கா வெளியேறியது. அப்போது கேப்டன் டிவில்லியர்ஸ் மைதானத்திலே கண்ணீர் விட்டு அழுதார். இந்நிலையில், 2019 உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் தென்னாப்பிரிக்கா உள்ளது. 2019 உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற தீவிரத்தில் டிவில்லியர்ஸ் சிறப்பாக ஆடி கோப்பையை வென்று கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பில் அந்நாட்டு ரசிகர்கள் இருந்தனர். 

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் கடந்த மே மாதம் திடீரென சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சியளித்தார். தென்னாப்பிரிக்காவில் மட்டுமல்லாமல் உலகம் முழுதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட டிவில்லியர்ஸின் ஓய்வு அறிவிப்பு கிரிக்கெட் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் உள்ளிட்ட டி20 லீக் போட்டிகளில் ஆடுவார். இந்நிலையில், டிவில்லியர்ஸ் தனது ஓய்வு முடிவை திரும்பப்பெற்று மீண்டும் தென்னாப்பிரிக்க அணியில் ஆட உள்ளதாக தகவல்கள் பரவின. இந்த தகவல் செம வைரலாக பரவியது. இதையடுத்து இதுதொடர்பாக விளக்கமளித்த டிவில்லியர்ஸ், தான் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் ஆட உள்ளதாக பரவும் தகவல் முற்றிலும் தவறான தகவல் என்றும் தனக்கு அந்த மாதிரியான திட்டம் எதுவும் இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

click me!