இங்கிலாந்துக்கு போனப்ப சொன்னதைத்தான் இப்பவும் சொல்றாரு சச்சின்!! பெரிய மனுஷன் பேச்சை இப்போதாவது கேளுங்கப்பா

By karthikeyan VFirst Published Dec 4, 2018, 12:09 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவில் எப்படி ஆட வேண்டும் என்று இந்திய பேட்ஸ்மேன்களுக்கு மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் அறிவுரை வழங்கியுள்ளார்.
 

ஆஸ்திரேலியாவில் எப்படி ஆட வேண்டும் என்று இந்திய பேட்ஸ்மேன்களுக்கு மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் நாளை மறுநாள்(6ம் தேதி) தொடங்குகிறது. முதல் போட்டி அடிலெய்டில் நடக்கிறது. இந்த டெஸ்ட் தொடர் இரு அணிகளுக்குமே மிக முக்கியமான தொடர்.

ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் தொடர் தோல்விகளை தழுவிவரும் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுக்கு எதிரான தொடரை வென்று உத்வேகத்தை பெறும் முனைப்பில் உள்ளது. அதேநேரத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியாக இருந்தாலும் வெளிநாடுகளில் தொடர் தோல்விகளை தழுவிவரும் இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில அந்த அணியை வீழ்த்தும் முனைப்பில் உள்ளது. மேலும் ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாத வாய்ப்பை பயன்படுத்தி ஆஸ்திரேலியாவில் முதல் டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைக்கும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. 

ஆஸ்திரேலிய அணி வலுவிழந்து திணறிவரும் வேளையில், இந்திய அணியோ பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சிறந்த அணியாக திகழ்கிறது. எனவே இந்தமுறை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்ல வாய்ப்புள்ளது என்று பல முன்னாள் ஜாம்பவான்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

பயிற்சி போட்டியின் போது ஏற்பட்ட காயத்தால் தொடக்க வீரர் பிரித்வி ஷா முதல் போட்டியிலிருந்து விலகியுள்ளார். எனவே முரளி விஜயும் ராகுலும் தொடக்க வீரர்களாக களமிறங்குவர். மேலும் புஜாரா, கோலி, ரஹானே, ரோஹித், ரிஷப், அஷ்வின் என பேட்டிங் ஆர்டர் வலுவாகத்தான் உள்ளது. ஆனால் கோலியை மட்டுமே சார்ந்திருக்காமல் அனைவரும் ஆட வேண்டியது அவசியம். 

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இந்திய பேட்ஸ்மேன்கள் எப்படி ஆட வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் அறிவுரை கூறியுள்ளார். ஸ்போர்ட்ஸ்டார் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் தொடக்க வீரர்கள் சரியாக அமைவது கடினம்தான். சில நேரங்களில் முதல் 4 விக்கெட்டுகளை விரைவாக இழந்துவிடக்கூடும். அதனால் முதல் 30 ஓவர்களை எப்படியாவது தாக்குப்பிடித்து தொடக்க வீரர்கள் ஆடிவிட வேண்டும். அப்படி ஆடிவிட்டால் ஆடுகளமும் பந்தும் கடினத்தன்மையை இழந்துவிடும். அதன்பிறகு பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தலாம். 

இங்கிலாந்து தொடருக்கு செல்லும் முன் இந்திய அணியிடம் முதல் 40 ஓவர்களை கவனமாக ஆடுமாறு அறிவுறுத்தினேன். அதையேதான் இப்போதும் சொல்கிறேன். ஆஸ்திரேலியாவிலும் முதல் 35 ஓவர்களை கவனமாக ஆட வேண்டும். இல்லையென்றால் ஆடுகளத்தில் இருக்கும் புற்களை பயன்படுத்தி அவர்கள் எளிதாக நமது விக்கெட்டை வீழ்த்திவிடுவார்கள் என்று சச்சின் எச்சரித்துள்ளார். 

சச்சின் டெண்டுல்கர் ஆலோசனை வழங்கியும் இங்கிலாந்தில் இந்திய வீரர்கள் சொதப்பிவிட்டனர். எனவே ஆஸ்திரேலியாவிலாவது அவரது அறிவுரையை மனதில் வைத்து கவனமாக ஆடவேண்டும். இல்லையென்றால் ஆஸ்திரேலியாவிலும் மண்ணை கவ்வுவது உறுதி. 
 

click me!