புஜாரா இடத்தில் ரோஹித்..? இந்திய அணியில் அதிரடி மாற்றம்..?

By karthikeyan VFirst Published Nov 30, 2018, 2:11 PM IST
Highlights

எனினும் ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்வது இந்திய அணிக்கு அவ்வளவு எளிதாக இருக்கப்போவதில்லை அந்த அணியின் முன்னாள் கேப்டன்கள் இயன் சேப்பல் மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். 
 

தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் தொடர் தோல்விகளை சந்தித்துள்ள இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை வீழ்த்தி தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது. அதேநேரத்தில் ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் அந்த அணியும் தொடர் தோல்வியை தழுவிவருவதால், இந்திய அணியை வீழ்த்தி மீண்டெழும் முனைப்பில் உள்ளது. 

ஸ்மித்தும் வார்னரும் இல்லாதது நல்ல வேகப்பந்து வீச்சு யூனிட்டை பெற்றிருக்கும் இந்திய அணிக்கு கூடுதல் பலமாக அமையும் எனவும் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் எனவும் பல முன்னாள் ஜாம்பவான்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

எனினும் ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்வது இந்திய அணிக்கு அவ்வளவு எளிதாக இருக்கப்போவதில்லை அந்த அணியின் முன்னாள் கேப்டன்கள் இயன் சேப்பல் மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். 

இந்த தொடர் குறித்து பேசிய இயன் சேப்பல், எதிரணியினர் வெற்றிக்காக மட்டுமே ஆடுவார்கள் என்பதை இந்திய அணி மனதில் கொள்ள வேண்டும். ஒரேயொரு பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய ஆடுகளங்களின் பவுன்ஸுக்கு இந்திய வீரர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். குறைந்த பவுன்ஸ் ஆடுகளங்களிலிருந்து வருபவர்கள், பந்துகள் கூர்மையாக எழும்பும்போது திணறுவர். இதுதான் ஆஸ்திரேலியாவில் பேட்டிங் செய்வதில் உள்ள சவால்.  பந்தை சேதப்படுத்திய விவகாரத்துக்கு பிறகு ஆஸ்திரேலிய வீரர்களின் கள நடத்தையில் மாற்றங்கள் இருக்கலாம். எனினும் பவுன்ஸர்கள் போட்டு இந்திய பேட்ஸ்மேன்களை குறிவைப்பதில் எந்தவித மாற்றமும் இருக்காது. அதனால் ஆஸ்திரேலிய அணியை குறைத்து மதிப்பிடக்கூடாது. அப்படி குறைத்து மதிப்பிட்டால் அவ்வளவுதான் என்று மிரட்டும் தொனியில் எச்சரித்துள்ளார். 

மேலும் ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஹேசில்வுட் என டாப் கிளாஸ் வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் பலவீனமாக இருப்பதால், பவுலர்கள் கூடுதல் பொறுப்புடனும் ஆக்ரோஷத்துடனும் பந்துவீசி இந்திய வீரர்களை கட்டுப்படுத்த முயல்வர் என்பதால் இந்திய வீரர்களுக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்று இயன் சேப்பல் எச்சரித்துள்ளார். 

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை விரைவில் வீழ்த்தி பந்து பளபளப்பாக இருக்கும்போதே விராட் கோலியை களத்திற்கு வரவைக்க ஆஸ்திரேலிய பவுலர்கள் முயல்வார்கள். அது இந்திய அணிக்கு தேர்வுப்பிரச்னையை உருவாக்கும். விரைவாக விக்கெட்டை இழக்கும் சூழலில், புஜாராவை 3ம் இடத்தில் இறக்கி தடுத்தாட வைப்பார்களா? அல்லது ஷார்ட் பிட்ச் பந்துகளை வெளுத்து வாங்கும் திறன்கொண்ட ரோஹித் சர்மாவை இறக்கிவிட்டு ஆக்ரோஷம் காட்டுவார்களா? என்பதைப் பார்க்க வேண்டும். கடந்த தொடரில் கோலி ஷார்ட் பிட்ச் பந்துகளை சிறப்பாக ஆடிய நிலையில் அவருக்கு உறுதுணையாக ரோஹித்தை இறக்குவது சிறந்தது என இயன் சேப்பல் கருத்து தெரிவித்துள்ளார். 
 

click me!