
போட்டியின் போது காயம் ஏற்பட்டதால் ஐந்து மாதங்கள் ஓய்வில் இருந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா மீண்டும் ஐபிஎல் ஆட்டத்தில் களம் இறங்க தயாராகிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நியூஸிலாந்திற்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடந்த கடைசி ஒரு நாள் போட்டியின் போது வலது தொடையில் காயமடைந்தார். அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டதால் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய தொடர்களில் இருந்து ஒதுங்கினார்.
தற்போது, காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து உடல் தகுதியை எட்டிவிட்ட அவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு தன்னை தயார் செய்து வருகிறார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் சர்மா நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், “ஓய்வில் இருந்தது ஐந்து மாதங்கள் தான் என்றாலும், ஏதோ கிரிக்கெட் விளையாடி நீண்ட காலம் ஆனது போல் உணர்கிறேன். மீண்டும் களம் திரும்புவதை ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.
இந்த காயத்தால் நிறைய ஆட்டங்களை தவற விட்டு விட்டேன். ஆனால் காயமடையும் போது ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையில் இவ்வாறு எல்லாம் நடப்பது சகஜம் தான். பழைய நினைவுகளை திரும்பி பார்க்க விரும்பவில்லை. இந்த சீசனை புத்துணர்ச்சியுடன் சிறப்பாக தொடங்க விரும்புகிறேன்.
இப்போது எனக்கு 29 வயது ஆகிறது. இந்த வயதில் 5 மாதங்கள் கிரிக்கெட் வாழ்க்கையை தவற விடுவது ஒன்றும் மோசமானது அல்ல. எதிர்காலத்திலும் இது போன்று நடக்கத்தான் செய்யும். அவ்வாறான சமயத்தில் மன உறுதியையும், நம்பிக்கையையும் இழந்து விடக்கூடாது. அது தான் முக்கியம்.
பெரிய அளவில் காயம் ஏற்படும் போது, தசைவலிமை குறைந்து விடும். மிகவும் வலுமிக்கவராக பழைய நிலைக்கு திரும்புவதே மிகப்பெரிய சவாலாக இருந்தது. நல்ல வேளையாக மீண்டும் களம் காண தயாராகி விட்டேன்” என்று ரோகித் சர்மா தெரிவித்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.