அஃப்ரிடி, டிவில்லியர்ஸ், கெய்ல்லாம் ஒரு ஆளா..? மெர்சல் காட்டும் ரோஹித்.. மிரண்டு நிற்கும் எதிரணிகள்

By karthikeyan VFirst Published Nov 2, 2018, 11:49 AM IST
Highlights

ஒருநாள் கிரிக்கெட்டில் மிக விரைவில் 200 சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா நிகழ்த்தியுள்ளார்.
 

ஒருநாள் கிரிக்கெட்டில் மிக விரைவில் 200 சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா நிகழ்த்தியுள்ளார்.

ரோஹித் சர்மா சிக்ஸர்கள் அடிப்பதில் வல்லவர். அலட்டிக்கொள்ளாமல் சிரமப்படாமல் தனது பேட்டிங் டெக்னிக்கின் மூலம் எளிதாக சிக்ஸர்கள் விளாசக்கூடியவர் ரோஹித் சர்மா. மிகக்குறைந்த போட்டிகளில் அதிகமான சிக்ஸர்கள் விளாசியவர் ரோஹித். 

ரோஹித்துக்கு முன்னதாக சிக்ஸர்கள் விளாசுவதில் வல்லவராக திகழ்ந்தவர் அஃப்ரிடி. தனது அதிரடியான பேட்டிங்கால் ரசிகர்களால் பூம் பூம் என அழைக்கப்படுகிறார். ஒருநாள் போட்டிகளில் 351 சிக்ஸர்களுடன் இவர் தான் முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கு அடுத்த இடத்தில் 275 சிக்ஸர்களுடன் கெய்ல் இரண்டாமிடத்திலும் 270 சிக்ஸர்களுடன் ஜெயசூரியா மூன்றாமிடத்திலும் 218 சிக்ஸர்களுடன் தோனி நான்காமிடத்திலும் உள்ளனர். 204 சிக்ஸர்களுடன் டிவில்லியர்ஸ் ஐந்தாமிடத்திலும் 202 சிக்ஸர்களுடன் ரோஹித் ஆறாமிடத்திலும் உள்ளனர்.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நேற்று நடந்த கடைசி போட்டியில் 4 சிக்ஸர்கள் விளாசிய ரோஹித் சர்மா, ஒருநாள் கிரிக்கெட்டில் 200 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இதன்மூலம் மிகக்குறைந்த இன்னிங்ஸ்களில் 200 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லை எட்டி ரோஹித் சர்மா சாதனை படைத்துள்ளார். 

187 இன்னிங்ஸ்களில் ரோஹித் சர்மா இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இதன்மூலம் இதற்கு முன்னதாக 200 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லை 195 இன்னிங்ஸ்களில் எட்டியிருந்த அஃப்ரிடியை ரோஹித் சர்மா பின்னுக்கு தள்ளியுள்ளார். இந்த பட்டியலில் 214 இன்னிங்ஸ்களில் 200 சிக்ஸர்கள் விளாசிய டிவில்லியர்ஸ் மூன்றாமிடத்தில் உள்ளார். மெக்கல்லம் நான்காமிடத்திலும் கெய்ல் ஐந்தாமிடத்திலும் உள்ளனர்.

இன்னிங்ஸ்களின் அடிப்படையில் ரோஹித் சர்மா முதலிடத்தில் இருந்தாலும் 200 சிக்ஸர்களை அடிக்க எடுத்துக்கொண்ட பந்துகளின் அடிப்படையில் ரோஹித் சர்மா மூன்றாமிடத்தில் உள்ளார். 8 ஆயிரத்துக்கும் அதிகமான பந்துகளை எதிர்கொண்டு 200 சிக்ஸர்களை விளாசியுள்ளார் ரோஹித். ஆனால் 4203 பந்துகளில் 200 சிக்ஸர்களை விளாசிய அஃப்ரிடி முதலிடத்திலும் மெக்கல்லம் இரண்டமிடத்திலும் உள்ளனர். 

ரோஹித் சர்மா தற்போது நல்ல ஃபார்மில் இருந்துவருவதால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவதற்குள் அஃப்ரிடியின் சிக்ஸர்கள் சாதனையை முறியடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

click me!