
ரஞ்சி டிராபி கிரிக்கெட்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இந்த தொடர் முழுவதும் ரோகித் சர்மா, விராட் கோலி படுமோசமாக பேட்டிங் செய்ததால் கடும் விமர்சனங்கள் எழுந்தன. மேலும் இந்திய அணி வீரர்கள் அனைவரும் ரஞ்சி டிராபி எனப்படும் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். அப்படி உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடாத வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் வலியுறுத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் மூத்த வீரர்கள், இளம் வீரர்கள் என அனைவரும் ரஞ்சி டிராபி உள்ளிட்ட உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என பிசிசிஐ உத்தரவிட்டது. இதனால் வேறு வழி இல்லாததால் ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் ரஞ்சி டிராபியில் விளையாட ஒத்துக் கொண்டனர். ரஞ்சி டிராபியில் ரோகித் சர்மா மும்பை அணிக்காகவும், விராட் கோலி டெல்லி அணிக்காகவும் விளையாடுகின்றனர்.
ரோகித் சர்மா சொதப்பல்
இந்நிலையில், ரஞ்சி டிராபியில் மும்பை அணியும், ஜம்மு காஷ்மீர் அணியும் மோதும் ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி முதல் இன்னிங்சில் வெறும் 120 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பெரும் எதிபார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கிய ரோகித் சர்மா 19 பந்துகளை சந்தித்து வெறும் 3 ரன்களில் உமர் நசீர் பந்தில் டோக்ராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா ஆட்டத்தை காண மும்பை ரசிகர்கள் திரண்டு வந்திருந்த நிலையில் அவர் ரசிகர்களை ஏமாற்றியுள்ளார்.
ரோகித் சர்மா மட்டுமின்றி இந்திய வீரர்கள் பலரும் சொற்ப ரன்னில் அவுட்டாகி சொதப்பினர்கள். முமபை அணிக்காக இறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். இதே அணியில் விளையாடும் ஷ்ரேயாஸ் ஐயர் 11 ரன்னில் நடையை கட்டினார். ஷிவம் துபே டக் அவுட் ஆனார்.
சுப்மன் கில், பண்ட்
சவுஷ்ராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணிக்காக களம் கண்ட ரிஷப் பண்ட் வெறும் 1 ரன்னில் கேட்ச் ஆனார். கர்நாடக அணிக்கு எதிராக பஞ்சாப் அணியில் களமிறங்கிய சுப்மன் கில் வெறும் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். பஞ்சாப் அணி முதல் இன்னிங்சில் 55 ரன்னில் சுருண்டது.அதே வேளையில் சவுராஷ்டிரா அணிக்காக விளையாடி வரும் ரவீந்திர ஜடேஜா டெல்லி அணிக்கு எதிராக 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா, சுப்மன் கில், ரிஷப் பண்ட் என மூன்று பேருமே சொதப்பினார்கள். இதனால் ரஞ்சி கிரிக்கெட்டில் இவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதிலும் படுமோசமாக விளையாடியதால் நெட்டிசன்கள் சமூகவலைத்தளத்தில் ட்ரோல் செய்து வருகின்றனர்.
நெட்டிசன்கள் ட்ரோல்
''இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா, சுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகியோரை கழட்டி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். இவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளித்தால் ஆஸ்திரேலியா போன்று இங்கிலாந்து தொடரிலும் படுதோல்வி அடைய வேண்டியதிருக்கும்'' என்று நெட்டிசனக்ள் தெரிவித்து வருகின்றனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.