
கோலி மற்றும் டிவில்லியர்ஸை சார்ந்தே எப்போதும் அணி இருக்க முடியாது. மற்ற வீரர்களும் பங்களிப்பை அளிக்க வேண்டும் என பெங்களூரு அணி வீரர் மோயின் அலி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 11வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஹைதராபாத் மற்றும் சென்னை அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. எஞ்சிய இரண்டு இடங்களுக்கு மும்பை, கொல்கத்தா, பெங்களூரு ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், 51வது லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, டிவில்லியர்ஸ் மற்றும் மோயின் அலியின் அதிரடியான பேட்டிங்காலும், கடைசி நேரத்தில் டி கிராண்ட் ஹோமின் அதிரடியாலும் 218 ரன்கள் குவித்தது. மோயின் அலி 34 பந்துகளில் 65 ரன்களும் டிவில்லியர்ஸ் 39 பந்துகளில் 69 ரன்களும் குவித்தனர்.
219 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 204 ரன்கள் எடுத்ததை அடுத்து பெங்களூரு அணி, 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது.
போட்டிக்கு பின்னர் பேசிய பெங்களூரு அணி வீரர் மோயின் அலி, அணியின் வெற்றிக்கு பங்களிப்பை அளிப்பது மிகவும் முக்கியம். எஞ்சிய ஒரு போட்டியிலும் வெற்றி பெற்று பிளே ஆஃபிற்கு தகுதி பெற வேண்டும். அதற்காக சிறப்பாக ஆடி அணியை வெற்றி பெற செய்ய வேண்டும். எப்போதுமே கோலி மற்றும் டிவில்லியர்ஸை சார்ந்தே அணி இருக்க முடியாது. மிகச்சிறந்த வீரர்களான அவர்கள் இருவரும் சிறப்பான பங்களிப்பை அளிக்கின்றனர். ஆனால் நாங்களும் சிறப்பாக ஆடி அணியின் வெற்றிக்கு உதவவேண்டும் என மோயின் அலி தெரிவித்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.