
கிரிக்கெட் விமர்சகர்களை இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என இழந்த இந்திய அணி, ஒருநாள் தொடரை 5-1 எனவும் டி20 தொடரை 2-1 எனவும் வென்று அசத்தியது.
இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்தபோது, இந்திய அணி தேர்வு சரியில்லை, பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடவில்லை என பல விமர்சனங்கள் எழுந்தன.
எனினும் டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி, மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றது. அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் தொடரின் தோல்வியிலிருந்து வெகுண்டெழுந்து ஒருநாள் தொடர் முழுதும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, 5-1 என ஒருநாள் தொடரை அபாரமாக வென்றது.
ஆனால், அப்போதும் அந்த வெற்றியை பல விமர்சகர்கள் இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்திற்கு கிடைத்த பலனாக பார்க்கவில்லை. தென்னாப்பிரிக்க அணியில் டுபிளெசிஸ், டிவில்லியர்ஸ், டி காக், ஸ்டெயின் போன்ற வீரர்கள் இல்லாததால் இந்திய அணிக்கு கிடைத்த வெற்றியாக கூறினர்.
இந்நிலையில், இந்திய அணியின் மீதான விமர்சகர்களின் பார்வை குறித்த அதிருப்தியை மிகவும் கோபத்துடன் வெளிப்படுத்தியுள்ளார் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ரவி சாஸ்திரி, இந்திய அணி தோல்வியுற்றால், அணி தேர்வு சரியில்லை. சரியாக விளையாடவில்லை என பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கின்றனர். அதேநேரத்தில் வெற்றி பெற்றால் அந்த வெற்றியை அணியின் திறமைக்கு கிடைத்த வெற்றியாக பார்ப்பதில்லை. எதிரணியின் பலவீனத்தால் இந்தியாவிற்கு கிடைத்த வெற்றியாக சித்தரிக்கின்றனர். எதிரணி வெற்றி பெற்றால் மட்டும் திறமைக்கு கிடைத்த வெற்றி. இந்தியா வெற்றி பெற்றால் மட்டும் எதிரணியின் பலவீனத்தால் கிடைத்த வெற்றியா? என கடும் கோபத்துடன் ரவி சாஸ்திரி வெளுத்து வாங்கியுள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.