உலகின் தலைசிறந்த ஸ்பின் பவுலர் இவர்தான்..! சச்சினே புகழ்ந்து தள்ளிய அந்த பவுலர் யார்..?

First Published May 26, 2018, 11:25 AM IST
Highlights
rashid khan is the best spin bowler in twenty over format says sachin


டி20 போட்டிகளில் உலகின் தலைசிறந்த பவுலர் ரஷீத் கான் தான் என மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் ஹைதராபாத் அணிக்காக ஆடிவரும் ரஷீத் கான், கொல்கத்தாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற இரண்டாவது தகுதி சுற்று போட்டியில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றிலும் முத்திரை பதித்தார்.

ஐபிஎல் 11வது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இறுதி போட்டியில் சென்னை அணியும் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. முதல் தகுதி சுற்று போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி, முதல் அணியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

முதல் தகுதி சுற்று போட்டியில் தோற்ற ஹைதராபாத், எலிமினேட்டர் போட்டியில் வென்ற கொல்கத்தாவுடன் இரண்டாவது தகுதி சுற்று போட்டியில் மோதியது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 174 ரன்கள் எடுத்தது. கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி, ஹைதராபாத் அணியின் ஸ்கோரை உயர்த்திய ரஷீத் கான், 10 பந்துகளில் 34 ரன்களை குவித்தார். 175 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 

பேட்டிங்கில் மிரட்டிய ரஷீத் கான், பவுலிங்கிலும் அசத்தினார். 4 ஓவர்களை வீசி 19 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒவ்வொரு கட்டத்திலும் கொல்கத்தாவின் நம்பிக்கையாக திகழ்ந்த கிறிஸ் லின், ரசல் ஆகிய முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். உத்தப்பா, கிறிஸ் லின், ஆண்ட்ரே ரசல் ஆகிய மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார் ரஷீத். நிதிஷ் ராணாவை ரன் அவுட்டாக்கினார். மேலும் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய, ஷுப்மன் கில் மற்றும் ஷிவம் மாவியின் கேட்ச்சுகளையும் அபாரமாக பிடித்து அசத்தினார்.

இவ்வாறு பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொல்கத்தாவை ஹைதராபாத் அணி வீழ்த்த முக்கிய காரணமாக ரஷீத் திகழ்ந்தார். ஆட்டநாயகன் விருதையும் தட்டிச்சென்றார்.

இந்த போட்டியில் ரஷீத் கானின் ஆட்டத்தை பார்த்து சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்துள்ளார். இதுதொடர்பாக சச்சின் பதிவிட்டுள்ள டுவீட்டில், எப்போதுமே ரஷீத் கான் ஒரு சிறந்த ஸ்பின்னர் என்று நினைப்பேன். ஆனால் தற்போது, டி20 போட்டிகளில் உலகின் தலைசிறந்த ஸ்பின்னர் ரஷீத் கான் தான் என்று கூறுவதில் எனக்கு எந்த தயக்கமுமில்லை. அவர் பேட்டிங்கும் ஆடுகிறார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர் சிறப்பானவர் என சச்சின் புகழ்ந்துள்ளார்.

19 வயதே ஆன ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான், ஸ்பின் பவுலிங், பேட்டிங், ஃபீல்டிங் என அனைத்திலும் சிறந்து விளங்குகிறார்.
 

click me!