
பிசிசிஐ நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியை தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜிநாமா செய்வதாக கூறி ராஜிநாமா செய்தார் வரலாற்று ஆய்வாளரான ராமச்சந்திர குஹா.
ஐபிஎல் சூதாட்ட வழக்கின் ஒரு பகுதியாக பிசிசிஐயை மறுசீரமைக்க, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி லோதா தலைமையிலான குழு சில பரிந்துரைகளை அளித்தது. ஆனால், அந்த பரிந்துரைகளை அமல்படுத்தாமல் பிசிசிஐ காலம் கடத்தி வந்தது.
இதையடுத்து கோபமடைந்த உச்ச நீதிமன்றம், கடந்த ஜனவரியில் பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை பதவி நீக்கம் செய்ததை தொடர்ந்து கடந்த ஜனவரி 30-ஆம் தேதி லோதா கமிட்டியின் பரிந்துரைகளை பிசிசிஐ அமல்படுத்துவதை கண்காணிப்பதற்காகவும், பிசிசிஐயை நிர்வகிப்பதற்காகவும் முன்னாள் சிஏஜி வினோத் ராய் தலைமையில் நிர்வாகக் குழுவை அமைத்தது உச்ச நீதிமன்றம்.
அதில் ஐடிஎஃப்சி இயக்குநர் விக்ரம் லிமாயே, ராமச்சந்திர குஹா, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றனர்.
இந்தக் குழு அமைக்கப்பட்டு நான்கு மாதங்களே ஆன நிலையில், ராமச்சந்திர குஹா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அவர் தனது ராஜிநாமா கடிதத்தை உச்ச நீதிமன்றத்தில் நேற்று அளித்தார். அதில் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியிலிருந்து விலகுவதாக குறிப்பிட்டிருக்கிறார்.
ராமச்சந்திரா குஹாவின் மனுவை கோடைகால சிறப்பு அமர்வு விசாரிக்கும். அவருடைய ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக்கொள்வது தொடர்பாக ஜூலை 14-ஆம் தேதி விசாரணை நடைபெறும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.