ஐபிஎல் அதிரடியால் இந்திய அணியில் இடம்பிடித்த வீரர்கள்!! ஒருநாள், டி20 அணியில் ரஹானேவிற்கு இடமில்லை

First Published May 9, 2018, 1:04 PM IST
Highlights
rahul and siddharth kaul got chance in indian squad


நடந்துவரும் ஐபிஎல் 11வது சீசனில் சிறப்பாக ஆடிவரும் கே.எல்.ராகுல் மற்றும் அம்பாதி ராயுடுவிற்கு இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம் கிடைத்துள்ளது. அதேபோல, ஹைதராபாத் அணியில் சிறப்பாக பந்துவீசிவரும் சித்தார்த் கௌலுக்கும் இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

முழுநேர டெஸ்ட் அணி அந்தஸ்து பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி, ஜூன் 14ம் தேதி, முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணியுடன் ஆடுகிறது. இந்த டெஸ்ட் போட்டி மற்றும் அதன்பிறகு இந்திய அணி ஆடவுள்ள அயர்லாந்து டி20 தொடர், இங்கிலாந்து தொடர் ஆகியவற்றுக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. பின்னர் மேற்கண்ட தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் கவுண்டி போட்டிகளில் கோலி ஆடவுள்ளதால், ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து டெஸ்ட் அணிக்கு ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அயர்லாந்து டி20 தொடர் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர் ஆகியவற்றிற்கான இந்திய அணியில், ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடிவரும் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நடந்துவரும் ஐபிஎல் 11வது சீசனில், அதிக ரன்களில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ள கே.எல்.ராகுல் மற்றும் அம்பாதி ராயுடு ஆகியோருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. ராகுலுக்கு ஒருநாள் மற்றும் டி20 ஆகிய இரு அணிகளிலும் இடம் கிடைத்துள்ளது. ஆனால் அம்பாதி ராயுடுவிற்கு ஒருநாள் அணியில் மட்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத் அணியில் சிறப்பாக பந்துவீசி வரும் சித்தார்த் கவுலுக்கு ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

அயர்லாந்து டி20 மற்றும் இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ஷிகர் தவான், ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சுரேஷ் ரெய்னா, மனீஷ் பாண்டே, தோனி(விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், பும்ரா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ஷிகர் தவான், ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், அம்பாதி ராயுடு, தோனி(விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், பும்ரா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ்.
 

click me!