அடுத்த போட்டியில் இரண்டு சதம் அடிப்பேன்!! தன்னம்பிக்கையுடன் துணிச்சல் ஸ்டேட்மெண்ட் கொடுத்த இந்திய வீரர்

By karthikeyan VFirst Published Dec 24, 2018, 3:20 PM IST
Highlights

முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளுமே தலா ஒரு போட்டியில் வென்றதால் தொடர் 1-1 என சமநிலை அடைந்துள்ளது. வரும் 26ம் தேதி மெல்போர்னில் தொடங்கும் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் களமிறங்க உள்ளன. 
 

தனது அரைசதங்களை சதங்களாக மாற்ற முடியும் எனவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த போட்டியில் இரண்டு சதங்கள் அடிப்பேன் எனவும் ரஹானே நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இந்திய அணி நம்பர் 1 அணியாக இருந்தும், வெளிநாடுகளில் தொடர் தோல்விகளை சந்தித்துவருகிறது. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து என இந்த ஆண்டில் இரண்டு வெளிநாட்டு தொடரிலுமே தோற்றுவிட்டது இந்திய அணி. எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்று தாங்கள் நம்பர் 1 அணிதான் என்பதை இந்திய அணி நியாயப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

இதுவரை ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றிராத இந்திய அணி, ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாத இந்த சூழலை பயன்படுத்தி தொடரை வென்று வரலாறு படைக்கும் முனைப்பில் உள்ளது. முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளுமே தலா ஒரு போட்டியில் வென்றதால் தொடர் 1-1 என சமநிலை அடைந்துள்ளது. வரும் 26ம் தேதி மெல்போர்னில் தொடங்கும் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் களமிறங்க உள்ளன. 

தொடக்க வீரர்கள் படுமோசமாக தொடர்ந்து சொதப்புவதும் இந்திய அணி வெளிநாடுகளில் மண்ணை கவ்வுவதற்கு முக்கிய காரணம். அதேபோல வெளிநாடுகளில் 50 ரன்களுக்கும் மேல் சராசரி வைத்திருக்கும் ரஹானே, வெளிநாடுகளில் மற்ற எந்த இந்திய வீரரை காட்டிலும் சிறப்பாக ஆடக்கூடியவர். ஆனால் அவருக்கு இந்த ஆண்டு சிறப்பானதாக அமையவில்லை. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, தற்போது ஆஸ்திரேலியாவில் இதுவரை முடிந்துள்ள இரண்டு போட்டிகள் என எதிலும் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. வெளிநாடுகளில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரஹானே, சோபிக்காததும் இந்திய அணி வெற்றி பெறாததற்கு ஓர் காரணம். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்துவரும் தொடரில் ரஹானே சிறப்பாகவே ஆடிவருகிறார். பயமோ பதற்றமோ இல்லாமல் தெளிவாக ஆடிவருகிறார். இரண்டாவது போட்டியில் தொடக்கம் முதலே அடித்து ஆடி மிரட்டினார். இதுவரை நடந்த 2 போட்டிகளில் 4 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்த ரஹானே, இரண்டு அரைசதங்கள் அடித்துள்ளார். ஆனால் அவற்றை அவர் சதமாக மாற்றவில்லை. சிறப்பாக ஆடியபோதிலும் அரைசதங்களை சதங்களாக மாற்றவில்லை. 

மூன்றாவது போட்டி வரும் 26ம் தேதி தொடங்க உள்ள நிலையில், இதுகுறித்து பேசிய ரஹானே, தென்னாப்பிரிக்க தொடரிலிருந்தே வெளிநாடுகளில் நமது பவுலர்கள் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்திவருகின்றனர். எனவே பேட்ஸ்மேன்கள் பவுலர்களுக்கு சப்போர்ட் செய்யும் விதமாக நன்றாக ஆடினால் முடிவு இந்திய அணிக்கு சாத்தியமாகவே வரும் என்றார். 

மேலும் தனது ஆட்டம் குறித்து பேசிய ரஹானே, கண்டிப்பாக அடுத்த போட்டியில் சதமடிப்பேன். அடிலெய்டில் நடந்த முதல் போட்டியிலிருந்தே நன்றாக ஆடிவருகிறேன். அதே ஆட்டத்தை தொடர்ந்தால், அரைசதங்களை கண்டிப்பாக சதமாக மாற்றமுடியும் என நம்புகிறேன். இரண்டு சதங்கள் அடிப்பேன் என்று உறுதியாக நம்புகிறேன். சூழலை புரிந்துகொண்டு அடிக்க ஆரம்பித்துவிட்டால் போட்டி நமக்கு சாதமாகவே முடியும். அவ்வாறு ஆடினாலே போதும், தனிப்பட்ட சாதனைகள் தானாகவே வந்துசேரும் என்றார் ரஹானே. 

click me!