இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 7 வயது சிறுவன் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டிருப்பதோடு, துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 7 வயது சிறுவன் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டிருப்பதோடு, துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 போட்டிகள் முடிந்துள்ளன. இதில் இந்திய அணி ஒரு போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளதால் 1-1 என தொடர் சமன் ஆகியுள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 26ம் தேதி மெல்போர்னில் நடக்க உள்ளது.
இந்த போட்டியில் 15 வீரர்களை கொண்ட ஆஸ்திரேலிய அணியில் 15வது வீரராக ஆர்ச்சி சில்லர் என்ற 7 வயது சிறுவன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதோடு, துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த ஆர்ச்சி சில்லர்..?
ஆர்ச்சி சில்லர் என்ற 7 வயது சிறுவன் பிறக்கும்போதே இதயவால்வில் பல பிரச்னைகளுடன் பிறந்துள்ளான். தற்போது 7 வயதே ஆகும் அந்த சிறுவனுக்கு அதற்குள்ளாகவே பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஆர்ச்சி சில்லரால் மற்ற சிறுவர்களை போல இயல்பு வாழ்க்கையை வாழ முடியாது. அதனால் பள்ளி செல்வதையே நிறுத்திவிட்டு வீட்டில் முழு கண்காணிப்பிலும் பாதுகாப்பிலும் வளர்க்கப்படுகிறார். கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட அவரிடம், உனது ஆசை என்னவென்று கேட்ட தந்தையிடம் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக வேண்டும் என்பதுதான் தனது ஆசை என தெரிவித்துள்ளார். உடனே ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் வாயிலாக தனது மகனின் ஆசையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
சிறுவனின் ஆசையை நிறைவேற்ற ஒப்புக்கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் ஆர்ச்சி சில்லரை அணியில் சேர்த்ததோடு அவரை துணை கேப்டனாகவும் நியமித்தது. மெல்போர்னில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் இதை உறுதி செய்தார். பின்னர் பார்டர் - கவாஸ்கர் டிராபி அறிமுக விழாவில் கோலி - டிம் பெய்னுடன் ஆர்ச்சி சில்லரும் நின்றார். ஆர்ச்சி சில்லரின் ஆசையை நிறைவேற்றி நெகிழ வைத்துள்ளது ஆஸ்திரேலிய அணி நிர்வாகம். கோலியும் பெய்னும் சேர்ந்து ஆர்ச்சி சில்லரை மகிழ்ச்சிப்படுத்தினர்.