வெறித்தனமா வெளுத்து வாங்கிய இஷான் கிஷான் அதிரடி சதம்!! ரஹானே நிதான சதம்.. சிக்ஸரா விளாசும் சூர்யகுமார்

By karthikeyan VFirst Published Oct 27, 2018, 12:13 PM IST
Highlights

தியோதர் டிராபி தொடரில் இந்தியா பி அணிக்கு எதிரான இறுதி போட்டியில் இந்தியா சி அணியின் கேப்டன் ரஹானே மற்றும் இளம் வீரர் இஷான் கிஷான் ஆகிய இருவரும் சதம் விளாசி அசத்தினர். 

தியோதர் டிராபி தொடரின் இறுதி போட்டியில் ரஹானே தலைமையிலான இந்தியா சி அணி சிறப்பாக ஆடிவருகிறது. 

தியோதர் டிராபி தொடரின் இறுதி போட்டியில் ரஹானே தலைமையிலான இந்தியா சி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா பி அணிகள் ஆடிவருகின்றன. 

டெல்லி ஃபெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் இந்த போட்டி நடந்துவருகிறது. டாஸ் வென்ற இந்தியா சி அணியின் கேப்டன் ரஹானே பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரஹானே மற்றும் இஷான் கிஷான் சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 

ரஹானே ஒருபுறம் நிதானமாக ஆட, இஷான் கிஷான் அதிரடியாக ஆடினார். இருவருமே விக்கெட்டை விட்டுக்கொடுத்துவிடாமல் சிறப்பாக ஆடினர். அதிரடியாக ஆடிய இஷான் கிஷான் சதம் விளாசினார். கடந்த போட்டியில் 69 ரன்கள் அடித்த இஷான், இந்த போட்டியில் சதம் விளாசி அசத்தினார். 87 பந்துகளில் 11 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 114 ரன்களை குவித்து உனாத்கத்தின் பந்தில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். ரஹானே - இஷான் கிஷான் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 210 ரன்களை குவித்தது. 

இதையடுத்து ரஹானேவுடன் ஜோடி சேர்ந்த ஷுப்மன் கில், இறங்கியது முதலே அடித்து ஆடினார். இதற்கிடையே சிறப்பாக ஆடிய ரஹானேவும் சதம் விளாசினார். சதம் விளாசிய பிறகு ரஹானேவும் அடித்து ஆட தொடங்கிய நேரத்தில் கில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்தியா ஏ அணிக்கு எதிரான கடந்த போட்டியில் சதம் விளாசிய கில், இந்த போட்டியில் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இதைத்தொடர்ந்து ரஹானேவுடன் ரெய்னா ஜோடி சேர்ந்தார். தியோதர் டிராபி தொடரின் ஒரு போட்டியில் கூட சோபிக்காத ரெய்னா, இந்த போட்டியிலாவது அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த போட்டியிலும் வெறும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். கடந்த போட்டிகளில் சரியாக ஆடாத ரஹானே இந்த போட்டியில் நிதானமாக ஆடி சதமடித்துள்ளார். 

ஆனால் ரெய்னா தொடர்ந்து வாய்ப்புகளை தவறவிட்டுவருகிறார். ரெய்னாவின் விக்கெட்டுக்கு பிறகு ரஹானேவுடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் சிக்ஸர்களாக விளாசிவருகிறார். 46 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்களுடன் இந்தியா சி அணி ஆடிவருகிறது. 
 

click me!