இன்று தொடங்கும் டென்மார்க் ஓபன் பேட்மிண்டனில் பி.வி. சிந்து…

Asianet News Tamil  
Published : Oct 19, 2016, 02:23 AM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
இன்று தொடங்கும் டென்மார்க் ஓபன் பேட்மிண்டனில் பி.வி. சிந்து…

சுருக்கம்

 

புதுடெல்லி,

இன்று தொடங்கும் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து கலந்து கொள்கிறார்.

டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் பிரிமியர் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஒடென்சே நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 23–ஆம் தேதி வரை நடக்கிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய வீராங்கனை பி.வி.சிந்து கலந்து கொள்கிறார். அவர் நாளை நடைபெறும் தனது முதல் சுற்று ஆட்டத்தில் சீன வீராங்கனை ஹி பிங்ஜியோவை சந்திக்கிறார்.

ஆகஸ்டு மாதம் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்று அசத்தியதால் தொடர்ந்து பாராட்டு மழையிலும், பரிசு குவியலிலும் மூழ்கிய பி.வி.சிந்து அதன் பிறகு பங்கேற்கும் முதல் போட்டி இதுவே. இதனால் அவர் மீது, எதிர்பார்ப்பும், மக்களின் கவனமும் அதிகரித்துள்ளது.

முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து ஓய்வு எடுத்து வரும் சாய்னா நேவால் இந்த போட்டியில் பங்கேற்கவில்லை. பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்த போட்டியில் இந்தியா தரப்பில் பி.வி.சிந்து மட்டுமே களம் காண இருக்கிறார்.

சமீபத்தில் நடந்த நெதர்லாந்து ஓபன் போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய இந்திய வீரர் அஜய் ஜெயராம் நாளை நடைபெறும் ஒற்றையர் பிரிவு முதலாவது சுற்று ஆட்டத்தில் தாய்லாந்து வீரர் பூன்சாக் பொன்சனாவை எதிர்கொள்கிறார்.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் கால் இறுதி வரை முன்னேறிய இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். மற்றொரு இந்திய வீரர்களான சாய் பிரனீத், தாய்லாந்து வீரர் தானோன்சாக்கையும், பிரனாய் தகுதி சுற்றில் வெற்றி பெறும் வீரரையும் சந்திக்கிறார்கள்.

இன்று நடைபெறும் முதலாவது சுற்று ஆட்டத்தில் காமன்வெல்த் சாம்பியனான இந்திய வீரர் காஷ்யப், எஸ்தோனியா வீரர் ரால் முஸ்ட்டுவுடன் மோதுகிறார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் மனு அட்ரி–சுமித் ரெட்டி, பிரனாவ் ஜெர்ரி–அக்ஷய் தேவால்கர் ஆகியோரும், கலப்பு இரட்டையர் பிரிவில் பிரனாவ்–சிக்கி ரெட்டி ஆகியோரும் இந்தியா சார்பில் களம் காணுகிறார்கள்

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IPL 2026: CSK vs SRH: இம்பேக்ட் பிளேயராக தோனி? மேட்ச் வின்னர் கம்பேக்! சிஎஸ்கே பிளேயிங் லெவன்!
CSK: “சேப்பாக்கத்தில் இன்று உயிர்ப்போர்..! தோற்றால் CSK கனவு முடிவு – SRH காத்திருக்கும் அதிர்ச்சி!”