
ஷாங்காய்,
ஷாங்காய் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் கடந்த ஒரு வார காலமாக நடந்து வந்தது. இதன் இறுதி ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான ஆன்டி முர்ரே, தரவரிசையில் 19-வது இடம் வகிக்கும் ராபர்ட்டோ பாடிஸ்டா அகுத்தை (ஸ்பெயின்) ஞாயிற்றுக் கிழமை எதிர்கொண்டார்.
ஒரு மணி 37 நிமிடங்கள் நீடித்த இந்த மோதலில் ஒலிம்பிக் சாம்பியனான ஆன்டி முர்ரே 7-6 (7-1), 6-1 என்ற நேர் செட் கணக்கில் அகுத்தை தோற்கடித்து பட்டத்தை சொந்தமாக்கினார். இந்த ஆண்டில் முர்ரேவின் 6-வது பட்டம் இதுவாகும். ஷாங்காய் மாஸ்டர்ஸ் போட்டியில் மகுடம் சூடுவது இது 3-வது (ஏற்கனவே 2010, 2011-ம் ஆண்டு) முறையாகும். 29 வயதான ஆன்டி முர்ரே, தரவரிசையில் முதலிடத்தை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறார். தற்போதைய நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்சை (செர்பியா) விட 915 புள்ளிகள் மட்டுமே முர்ரே பின்தங்கி இருக்கிறார். இந்த சீசனில் மேலும் 3 தொடர்களில் விளையாட இருப்பதால் ஆண்டு இறுதிக்குள் முர்ரே நம்பர் ஒன் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.
இதே போல் ஹாங்காங் ஓபன் டென்னிஸ் இறுதி ஆட்டத்தில் டென்மார்க் வீராங்கனை கரோலினா வோஸ்னியாக்கியும், பிரான்சின் கிரிஸ்டினா மிலாடெனோவிச்சும் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் வோஸ்னியாக்கி 6-1, 6-7, 6-2 என்ற செட் கணக்கில் மிலாடெனோவிச்சை வீழ்த்தி கோப்பையை வசப்படுத்தினார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.