அதிரடி வீரர்களை வாரி குவித்த பஞ்சாப்!! பிரித்தெடுத்த ப்ரீத்தி ஜிந்தா

First Published Jan 27, 2018, 4:27 PM IST
Highlights
punjab team purchasing such good players


சர்வதேச அளவிலான சிறந்த அதிரடி வீரர்களை பஞ்சாப் அணி வாங்கி குவித்துள்ளது.

11வது ஐபிஎல் சீசனுக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இன்றும் நாளையும் ஏலம் நடைபெறுகிறது.

இன்று நடந்த முதல் நாள் ஏலத்தில், இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், அதிகபட்சமாக ரூ.12.5 கோடிக்கு ராஜஸ்தான் அணியால் எடுக்கப்பட்டார். இவருக்கு அடுத்தபடியாக ரூ.11 கோடிக்கு ராகுல் மற்றும் மனீஷ் பாண்டே ஆகியோர் எடுக்கப்பட்டனர். இளம் வீரர் சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் அணி 8 கோடி ரூபாய்க்கு எடுத்தது. இந்திய ஆல்ரவுண்டர் கேதர் ஜாதவை சென்னை அணி ரூ.7.8 கோடிக்கு சென்னை அணி எடுத்தது.

இன்றைய ஏலத்தில் பஞ்சாப் அணி, அதிரடி வீரர்களை எடுத்தது. ஏலத்தில் பஞ்சாப் அணியின் உரிமையாளரும் நடிகையுமான ப்ரீத்தி ஜிந்தா, அந்த அணியின் ஆலோசகரும் முன்னாள் அதிரடி வீரருமான சேவாக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த அதிரடி வீரரான டேவிட் மில்லரை, ஆர்டிஎம் முறையை பயன்படுத்தி 3 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி தக்கவைத்தது.

ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் ஆரோன் ஃபிஞ்சை ரூ.6.2 கோடிக்கும் யுவராஜ் சிங்கை 2 கோடிக்கும் அந்த அணி எடுத்தது.

இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் லோகேஷ் ராகுலை எடுப்பதில் பஞ்சாபிற்கும் ஹைதராபாத்திற்கும் கடும் போட்டி நிலவியது. இறுதியில், 11 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி ராகுலை எடுத்தது.

அதேபோல, சென்னை அணியின் செல்லப்பிள்ளையாக திகழ்ந்த ரவிச்சந்திரன் அஷ்வினை ரூ.7.6 கோடிக்கு பஞ்சாப் அணி எடுத்தது.

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரராகவும் சிறந்த ஆல்ரவுண்டராகவும் திகழும் மார்க்ஸ் ஸ்டோய்னிஸையும் ரூ.6.2 கோடிக்கு பஞ்சாப் எடுத்தது.

அதேபோல, மனீஷ் பாண்டேவை எடுப்பதில் ஹைதராபாத்திற்கும் பஞ்சாபிற்கும் இடையே கடும் போட்டி நிலவியது. ஏற்கனவே லோகேஷ் ராகுலை 11 கோடிக்கு எடுத்ததால் மனீஷ் பாண்டேவை அந்த அணி தவிர்த்தது. டுபிளெசிஸ், பிராவோ ஆகிய வீரர்களையும் பஞ்சாப் ஏலம் எடுத்தது. ஆனால், அவர்களை சென்னை அணி ஆர்டிஎம் முறையை பயன்படுத்தி தக்கவைத்தனர்.

ஆக மொத்தத்தில் இன்றைய ஏலத்தில் பஞ்சாப் அணி, 20 ஓவர் போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் வீரர்களை எடுத்துவிட்டது என்றால் மிகையாகாது.
 
டுபிளெசிஸ், பிராவோ போன்ற வீரர்களை எடுக்க முடியாமல் போனதற்காக, பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா வருந்தினாலும், ராகுல், ஸ்டோய்னிஸ், யுவராஜ், அஷ்வின், மில்லர், ஃபிஞ்ச் ஆகிய வீரர்களை எடுத்த மகிழ்ச்சியில் ப்ரீத்தி உள்ளார்.
 

click me!