ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ்-க்கு தண்ணீர் காட்டிய பஞ்சாப்...

First Published Apr 9, 2018, 10:37 AM IST
Highlights
Punjab defeat Delhi Daredevils in IPL


இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியின் 2-வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தியது.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியின் 2-வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் இடையே நடைப்பெற்றது.

பஞ்சாப் மாநிலம் சண்டீகரில் நேற்று மாலை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ஓட்டங்கள் எடுத்தது.  அடுத்து ஆடிய பஞ்சாப் 18.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 167 ஓட்டங்கள் எடுத்து வென்றது.

டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் ஃபீல்டிங் செய்ய தீர்மானித்தது. பேட் செய்ய வந்த டெல்லியில் தொடக்க வீரர் காலின் மன்ரோ 4 ஓட்டங்களுக்கு நடையைக் கட்டினார். உடன்வந்த கேப்டன் கௌதம் கம்பீர் சற்று நிலைத்து ஆட, மறுமுனையில் ஷ்ரேயஸ் ஐயர் 11 ஓட்டங்களுக்கு வீழ்ந்தார்.

அடுத்து வந்த விஜய் சங்கர் 13 ஓட்டங்களுக்கு பெவிலியன் திரும்ப, எதிர்முனையில் அரைசதம் எட்டினார் கம்பீர். அவருடன் இணைந்த ரிஷப் பந்த் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 28 ஓட்டங்கள் சேர்த்து வெளியேறினார். 

இந்த நிலையில், நிலைத்து ஆடிவந்த கம்பீரும் 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 55 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ஆடியவர்களில் ராகுல் தெவாடியா 9 ஓட்டங்கள், டேனியல் கிறிஸ்டியன் 13 ஓட்டங்களுக்கு ஆட்டத்தை முடித்துக் கொண்டனர். 

20 ஓவர்கள் முடிவில் கிறிஸ் மோரிஸ் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 27 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 

பஞ்சாப் தரப்பில் மோஹித் சர்மா, முஜிப் உர் ரஹ்மான் தலா 2, அஸ்வின், அக்ஸர் படேல் தலா ஒரு விக்கெட் சாய்த்தனர்.

அடுத்து ஆடிய பஞ்சாப் அணியில் தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் அபாரமாக ஆடி அருமையான தொடக்கத்தை ஏற்படுத்தினார். 14 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் அரைசதம் எட்டி, "ஐபிஎல் போட்டியில் அதிவேக (14 பந்துகள்) அரைசதம் அடித்த வீரர்' என்ற பெருமையை பெற்றார். முன்னதாக, கொல்கத்தா வீரர் இர்ஃபான் பதான் 15 பந்துகளில் அரைசதம் எட்டியதே விரைவானதாக இருந்தது.

இந்த நிலையில், உடன் வந்த மயங்க் அகர்வால் 7 ஓட்டங்களில் வெளியேற, லோகேஷ் ராகுல் 51 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் வந்தவர்களில் யுவராஜ் சிங் 12 ஓட்டங்கள், கருண் நாயர் 50 ஓட்டங்கள் (5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) சேர்த்தனர். 

இறுதியாக டேவிட் மில்லர் - மார்கஸ் ஸ்டாய்னிஸ் கூட்டணி அணியை வெற்றிக்கு வழிநடத்தியது. மில்லர் 24 ஓட்டங்கள், மார்கஸ் 22 ஓட்டங்கள் எடுத்திருந்தனர்.

டெல்லி தரப்பில் போல்ட், மோரிஸ், கிறிஸ்டியன், ராகுல் தெவாடியா தலா ஒரு விக்கெட் எடுத்திருந்தனர். 

லோகேஷ் ராகுல் ஆட்டநாயகன் ஆனார்.

tags
click me!