
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 42-ஆவது லீக் ஆட்டத்தில் புணே சிட்டி அணி 4-3 என்ற கோல் கணக்கில் டெல்லி டைனமோஸ் அணியைத் தோற்கடித்தது.
இந்த வெற்றியின் மூலம் 15 புள்ளிகளை எட்டிய புணே அணி, புள்ளிகள் பட்டியலில் 4-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
புணேவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 3-ஆவது நிமிடத்திலேயே புணே அணிக்கு கோல் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை எட்வர்டோ வீணடித்தார். 25-ஆவது நிமிடத்தில் புணே அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் புணே வீரர் சிசாக்கோ பந்தை கோல் கீப்பர் கையில் அடித்து வீணடித்தார்.
44-ஆவது நிமிடத்தில் லீவிஸ் கோலடிக்க, டெல்லி அணி 1-0 என முன்னிலை பெற்றது. பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில் அனல் பறக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்திய புணே அணி 55-ஆவது நிமிடத்தில் ஸ்கோரை சமன் செய்தது. ப்ரீ கிக் வாய்ப்பில் ஜொனாதன் லூகா கொடுத்த கிராஸைப் பயன்படுத்தி அனிபால் ரோட்ரிகஸ் இந்த கோலை அடித்தார்.
62-ஆவது நிமிடத்தில் புணேவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த முறை பெனால்டி வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட சிசாக்கோ கோலடித்தார். 63-ஆவது நிமிடத்தில் டெல்லி கோல் கீப்பரும், பின்கள வீரர்களும் செய்த தவறைப் பயன்படுத்தி புணேவின் 3-ஆவது கோலை அடித்தார் அனிபால் ரோட்ரிகஸ்.
ஆனால் 79-ஆவது நிமிடத்தில் புணே வீரர் பெரெய்ரா "ஒன்' கோலடிக்க, டெல்லிக்கு 2-ஆவது கோல் கிடைத்தது. இதன்பிறகு இரு அணிகளும் அபாரமாக ஆட, "இஞ்சுரி' நேரத்தில் புணேவின் மாற்று ஆட்டக்காரரான லென்னி ரோட்ரிகஸ் ஒரு கோலடிக்க, புணே 4-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. அதே "இஞ்சுரி' நேரத்தில் டெல்லியின் மால்சாம்ஸுலாவும் கோலடித்தார்.
எனினும் டெல்லி அணியால் தோல்வியிலிருந்து தப்ப முடியவில்லை. இறுதியில் புணே அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. இந்த ஆட்டத்தில் தோற்றாலும் டெல்லி அணி 17 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.