முதல் டெஸ்டில் புஜாரா செய்த அபார சம்பவம்!! மிரண்டு போன ஆஸ்திரேலியா

By karthikeyan VFirst Published Dec 6, 2018, 2:13 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில், அபாரமாக ஆடி சதமடித்த புஜாரா, இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்து நல்ல ஸ்கோரை எட்டவைத்தார். 
 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில், அபாரமாக ஆடி சதமடித்த புஜாரா, இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்து நல்ல ஸ்கோரை எட்டவைத்தார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் டாப் ஆர்டர்கள் ராகுலும் முரளி விஜயும் வழக்கம்போல சொதப்பினர். பயிற்சி போட்டியில் சிறப்பாக ஆடி நம்பிக்கையளித்த இருவருமே இந்த போட்டியில் சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். 

ராகுல் 2 ரன்களிலும் முரளி விஜய் 11 ரன்களிலும் வெளியேற, இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியும் 3 ரன்னில் நடையை கட்டினார். அண்மைக்காலமாகவே நன்றாக ஆடாமல் சொதப்பிவரும் ரஹானே, இந்த இன்னிங்ஸிலும் வெறும் 13 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து புஜாரா - ரோஹித் சர்மா ஜோடி சிறப்பாக ஆடிவந்த நிலையில், அவசரப்பட்டு தூக்கி அடித்து விக்கெட்டை பறிகொடுத்தார் ரோஹித் சர்மா. 

ரோஹித் சர்மா 37 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து களத்திற்கு வந்த ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி 25 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு புஜாராவுடன் ஜோடி சேர்ந்த அஷ்வின் பொறுப்பாக ஆடினார். இந்த ஜோடி 7வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தது. அஷ்வினும் 25 ரன்களில் ஆட்டமிழக்க, இஷாந்த் சர்மாவும் 4 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி 210 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது. 

இதையடுத்து அதிரடியை கையிலெடுத்த புஜாரா, பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார். 90 ரன்களை கடந்ததும் சிக்ஸரும் பவுண்டரியும் விளாசி தனது 16வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். 246 பந்துகளில் 123 ரன்களை குவித்து, முதல் நாள் ஆட்டம் முடிய இருந்த நிலையில், கடைசி பந்திற்கு முந்தைய பந்தில் ஆட்டமிழந்தார். 

முதல் நாள் ஆட்டநேர முடிவில் 87.5 ஓவருக்கு 9 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி 250 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களையும் எளிதாக வீழ்த்திவிட்ட ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு நெருக்கடியை கொடுத்தார் புஜாரா. இடது கை, வலது கை வேகப்பந்து வீச்சு, ஸ்பின் பவுலிங் என அனைத்தையுமே திறமையாக எதிர்கொண்டு ஆடினார். இன்றைய நாளில் வீசப்பட்ட 527 பந்துகளில் புஜாரா மட்டுமே 246 பந்துகளை எதிர்கொண்டு ஆடினார். கடைசியில் அவர் ரன் அவுட் ஆகிதான் வெளியேறினாரே தவிர, பவுலர்களிடம் விக்கெட்டை பறிகொடுக்கவில்லை. 

இன்றைய இன்னிங்ஸின் பாதிக்கு பாதி பந்துகளை அவரே எதிர்கொண்டு ஆடினார். எஞ்சிய பாதி பந்துகளைத்தான் மற்ற அனைத்து வீரர்களும் ஆடியுள்ளனர். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நிதானமாக ஆடிய புஜாராவுடன் ரோஹித் சர்மா ஜோடி சேர்ந்தார். புஜாரா நிதானமாக ஆட, மறுமுனையில் ரோஹித் சர்மா, ஆஸ்திரேலிய பவுலர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடினார்.  இந்த ஜோடி சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்துவந்த நிலையில், அவசரப்பட்டு ரோஹித் சர்மா விக்கெட்டை பறிகொடுத்தார். 61 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 37 ரன்கள் எடுத்த ரோஹித் சர்மா, நாதன் லயனின் ஸ்பின் பவுலிங்கை தூக்கி அடித்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
 

click me!