புரோ கபடி: ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி நூலிழையில் வெற்றியை ருசித்தது பெங்கால் வாரியர்ஸ்…

First Published Oct 2, 2017, 11:15 AM IST
Highlights
Pro Kabaddi The Bengal Warriors tasted victory over the Jaipur team


புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 104-வது ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி 32-31 என்ற புள்ளிகள் கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை நூலிழையில் வெற்றிக் கண்டது.

புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 104-வது ஆட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே அசத்தலாக விளையாடிய ஜெய்ப்பூர் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.

பெங்கால் அணி தனது ரைடர் மணீந்தர் சிங்கின் மூலம் முதல் புள்ளியைப் பெற்று தொடர்ந்து சிறப்பாக ஆடி 5-வது நிமிடத்தில் ஸ்கோரை 3-3 என்று சமன் செய்தது.

பிறகு பெங்கால் அணி 5-3 என்ற கணக்கில் முன்னிலை பெற, 10-வது நிமிடத்தில் ஜெய்ப்பூர் வீரர் விக்னேஷ் சூப்பர் ரைடு மூலம் 3 புள்ளிகளைக் கைப்பற்றியதால் ஜெய்ப்பூர் அணி 6-5 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

பின்னர் இரு அணிகளும் அபாரமாக ஆட, முதல் பாதி ஆட்டநேர முடிவில் ஜெய்ப்பூர் அணி 12-11 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 23-வது நிமிடத்தில் பெங்கால் வாரியர்ஸை ஆல் ஔட்டாக்கிய ஜெய்ப்பூர் அணி 18-13 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ரைடு சென்ற மணீந்தர் சிங்கை வீழ்த்திய ஜெய்ப்பூர் அணி 19-13 என்ற நிலையை எட்டியது. 

பின்னர் தொடர்ச்சியாக 3 ரைடுகள் சென்ற மணீந்தர் சிங், 4 புள்ளிகளைக் கைப்பற்ற, பெங்கால் அணி சரிவிலிருந்து மீண்டது. தனது அபார ரைடின் மூலம் தொடர்ந்து புள்ளிகளைக் கைப்பற்றிய மணீந்தர் சிங், 34-வது நிமிடத்தில் 10-வது புள்ளியைக் கைப்பற்றி, சூப்பர்-10 அந்தஸ்தை பெற்றார். இதன்மூலம் ஸ்கோரும் 22-22 என்ற சமநிலையை எட்டியது.

இதன்பிறகு ஜெய்ப்பூர் அணியை ஆல் ஔட்டாவதிலிருந்து தொடர்ந்து காப்பாற்றிய பவன் குமார், 18-வது நிமிடத்தில் பெங்கால் வீரர்களிடம் சிக்கினார். இதனால் அந்த அணி ஆல் அவுட்டானது. அப்போது பெங்கால் அணி 29-30 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தது.

பின்னர் ரைடு சென்ற தீபக் நர்வால் ஒரு புள்ளியை தட்டி வர, ஸ்கோர் 30-30 என்று சமநிலையை எட்டியது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டு கடைசி நிமிடத்தில் ரைடு சென்ற ஜெய்ப்பூர் வீரர் துஷார் பாட்டீலை வீழ்த்திய பெங்கால் அணி, 31-30 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது. 

ஆட்டம் முடிவடைய சில விநாடிகளே இருந்த நிலையில், ரைடு சென்ற பெங்கால் வீரர் மணீந்தர் சிங் நேரத்தைக் கழித்துவிட்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துணிச்சலாக ஏறி ஆடிய அவர், போனஸ் புள்ளிக்கான எல்லையைத் தொட்டார். அப்போது ஜெய்ப்பூர் வீரர்கள் மணீந்தர் சிங்கை மடக்கிப் பிடித்தனர். எனினும் அவர் போனஸ் புள்ளிக்கான எல்லையை ஏற்கெனவே தொட்டிருந்ததால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கிடைக்க, பெங்கால் 32-31 என்றப் புள்ளிகள் கணக்கில் வெற்றி கண்டது.

இதுவரை 19 ஆட்டங்களில் விளையாடியுள்ள பெங்கால் அணி 9-வது வெற்றியைப் பெற்றுள்ளது. அந்த அணி 64 புள்ளிகளுடன் "பி' பிரிவில் 2-ஆவது இடத்தில் உள்ளது.

அதேநேரத்தில் ஜெய்ப்பூர் அணி 15 ஆட்டங்களில் விளையாடி 7-வது தோல்வியை சந்தித்துள்ளது. அந்த அணி 44 புள்ளிகளுடன் "ஏ' பிரிவில் 5-ஆவது இடத்தில் உள்ளது. 

tags
click me!