அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் தலைவரானார் பிரவின் மகாஜன்…

First Published Dec 2, 2016, 12:34 PM IST
Highlights


அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் (ஏஐடிஏ) இடைக்கால தலைவராக பிரவீண் மகாஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் ஏஐடிஏவின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் பிரவீண்.

ஏஐடிஏவின் தலைவராக இருந்த அனில் கன்னா, மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் நடவடிக்கை காரணமாக தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரியான பிரவீண் மகாஜன், மத்திய உற்பத்தி மற்றும் சுங்க வரித்துறை தலைவராக பணியாற்றியுள்ளார். தற்போது மத்திய நிர்வாக தீர்ப்பாய உறுப்பினராக ஜோத்பூரில் பணியாற்றி வருகிறார்.

மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் விளையாட்டு வழிகாட்டு நெறிமுறைப்படி ஒருவர் தொடர்ச்சியாக 3 முறை விளையாட்டு சங்க நிர்வாகியாக இருக்க முடியாது. விளையாட்டு சங்க பதவியில் ஒருவர் தொடர்ந்து இரு முறை இருந்துவிட்டால், அதன்பிறகு 4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகுதான் அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியும். ஆனால் அனில் கன்னா, 4 ஆண்டு இடைவெளி இல்லாமல் தலைவராக (2016-2020) தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து அவரை பதவி விலகுமாறு மத்திய விளையாட்டு அமைச்சகம் வலியுறுத்தியது. அதன் காரணமாக அவர் சமீபத்தில் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
இதையடுத்து ஏஐடிஏவின் செயற்குழு உறுப்பினர்கள் கூடி, பிரவீண் மகாஜனை இடைக்கால தலைவராக நியமித்துள்ளனர். அடுத்த ஆண்டு மார்ச் 31-க்குள் ஏஐடிஏவின் பொதுக்குழு கூடி புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும்.

இது தொடர்பாக ஏஐடிஏவின் பொதுச் செயலர் ஹிரோன்மாய் சாட்டர்ஜி கூறுகையில், "எங்களுடைய சங்கம், தலைவர் இன்றி செயல்படுவதாக மத்திய அரசு கூறியிருந்தது. இப்போது எங்கள் சங்கத்துக்கான தலைவரை தேர்வு செய்துவிட்டோம். பிரவீண் மகாஜன் இடைக்கால தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய தலைவர் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் தேர்வு செய்யப்படுவார்' என்றார்.

tags
click me!