பஞ்சாபபை வீழ்த்தி ஐந்தாவது வெற்றியைப் பெற்று அசத்தியது மும்பை…

 
Published : Apr 21, 2017, 11:12 AM ISTUpdated : Sep 19, 2018, 03:10 AM IST
பஞ்சாபபை வீழ்த்தி ஐந்தாவது வெற்றியைப் பெற்று அசத்தியது மும்பை…

சுருக்கம்

Pandeys defeat was the fifth victory in Mumbai

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 22-ஆவது லீக் ஆட்டத்தில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தியதன்மூலம் மும்பை அணி 5-ஆவது வெற்றியைப் பெற்று அசத்தியது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 22-ஆவது லீக் ஆட்டம் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதனையடுத்து பேட் செய்த பஞ்சாப் அணியின் ஷான் மார்ஷ் 21 ஓட்டங்களில் வெளியேற ஹஷிம் ஆம்லாவுடன் இணைந்தார் ரித்திமான் சாஹா.

இந்த இணை சற்று நிதானமாக ஆட, முதல் 10 ஓவர்களில் 69 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது பஞ்சாப்.

கிருனால் பாண்டியா வீசிய 11-ஆவது ஓவரில் ஆம்லா சிக்ஸரை விளாசி, அதிரடியில் இறங்கினார். அதே ஓவரில் ரித்திமான் சாஹா அவுட்டானார். அவர் 15 பந்துகளில் 11 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார்.

இதையடுத்து மேக்ஸ்வெல் களமிறங்க, மலிங்கா வீசிய 12-ஆவது ஓவரில் இரு பவுண்டரிகளை விளாசிய ஆம்லா, 34 பந்துகளில் அரை சதம் எடுத்தார்.

மெக்லீனாகான் வீசிய 15-ஆவது ஓவரை எதிர்கொண்ட மேக்ஸ்வெல், அதில் 3 சிக்ஸர், இரு பவுண்டரிகளை பறக்கவிட, அந்த ஓவரில் மட்டும் 28 ஓட்டங்கள் கிடைத்தன.

மலிங்கா வீசிய அடுத்த ஓவரில் ஆம்லா தன் பங்குக்கு இரு சிக்ஸர், இரு பவுண்டரிகளை விளாச, அந்த ஓவரில் 22 ஓட்டங்கள் கிடைத்தன. இதன்பிறகு தொடர்ந்து வேகம் காட்டிய மேக்ஸ்வெல், 18 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 40 ஓட்டங்கள் சேர்த்து பூம்ரா பந்துவீச்சில் அவுட் ஆனார். இந்த இணை 5.3 ஓவர்களில் 83 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் வந்த மார்கஸ் ஸ்டானிஸ் 1 ரன்னில் வெளியேற, அக்ஷர் படேல் வந்தார். மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக ஆடிய ஆம்லா, மலிங்கா வீசிய கடைசி ஓவரின் முதல் இரு பந்துகளில் இரு சிக்ஸர்களை விளாசி, 58 பந்துகளில் சதத்தை எட்டினார்.

டி20 போட்டியில் அவர் எடுத்த முதல் சதம் இது. இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 198 ஓட்டங்கள் குவித்தது.

ஆம்லா 104, அக்ஷர் படேல் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மும்பை தரப்பில் மெக்லீனாகான் 2 விக்கெட் வீழ்த்தினார். மலிங்கா விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை.

பின்னர் பேட் செய்த மும்பை அணியில் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர், சந்தீப் சர்மா வீசிய முதல் ஓவரிலேயே சிக்ஸரை விளாசி அதிரடியில் இறங்கினார். மறுமுனையில் பார்த்திவ் படேல் வேகம் காட்ட, 5 ஓவர்களில் 68 ஓட்டங்களை எட்டியது மும்பை.

மார்கஸ் ஸ்டானிஸ் வீசிய அடுத்த ஓவரின் முதல் இரு பந்துகளில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை விரட்டிய படேல், 5-ஆவது பந்தில் அவுட்டானார். அவர் 18 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 37 ஓட்டங்கள்எடுத்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 5.5 ஓவர்களில் 81 ஓட்டங்கள் குவித்தது.

இதனையடுத்து வந்த நிதிஷ் ராணாவும் அதிரடியாக ரன் சேர்க்க, ஜோஸ் பட்லர் 24 பந்துகளில் அரை சதம் கண்டார். ராணாவும், பட்லரும் வெளுத்து வாங்க, 10 ஓவர்களில் 123 ஓட்டங்களை எட்டியது மும்பை.

ஸ்வப்னில் சிங் வீசிய 12-ஆவது ஓவரில் ராணா இரு சிக்ஸர்களை விரட்ட, சந்தீப் சர்மா வீசிய அடுத்த ஓவரில் பட்லர் இரு சிக்ஸர்களை விளாசினார்.

மும்பை அணி 13.1 ஓவர்களில் 166 ஓட்டங்களை எட்டியபோது பட்லரின் விக்கெட்டை இழந்தது. அவர் 37 பந்துகளில் 5 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 77 ஓட்டங்கள் குவித்தார்.

இதையடுத்து ஹார்திக் பாண்டியா களமிறங்கினார். இஷாந்த் சர்மா வீசிய 15-ஆவது ஓவரில் சிக்ஸரை விளாசிய ராணா, 29 பந்துகளில் அரை சதம் கண்டார். அதே ஓவரில் பாண்டியா ஒரு சிக்ஸர், இரு பவுண்டரியை விரட்ட, மோஹித் சர்மா வீசிய அடுத்த ஓவரில் சிக்ஸரை விளாசி போட்டியை முடித்தார் ராணா.

மும்பை அணி 15.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 199 ஓட்டங்கள் குவித்து வெற்றி கண்டது.  ராணா 34 பந்துகளில் 7 சிக்ஸர்களுடன் 62, பாண்டியா 4 பந்துகளில் 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பஞ்சாப் தரப்பில் மார்கஸ் ஸ்டானிஸ், அக்ஷர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பஞ்சாபை வீழ்த்தியதன் மூலம் மும்பை ஐந்தாவது வெற்றியை பெற்று அசத்தியது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Boxing Day Test: முதல் நாளில் சாய்ந்த 20 விக்கெட்டுகள்! ஆஸி., இங்கிலாந்து பௌலர்கள் வெறித்தனம்
Ind vs NZ: கோலி, ரோகித் இன்.. 3 வீரர்களுக்கு கல்தா கொடுத்த தேர்வு குழு..?