
பாகிஸ்தான் அணிக்கும், இங்கு வரும் வெளிநாட்டு அணிக்குமான பாதுகாப்பு விஷயத்தில் எவ்வித சமரசமும் கிடையாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன் நஜம் சேத்தி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன் நஜம் சேத்தி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், “பாகிஸ்தான் - மேற்கிந்தியத் தீவுகள் இடையே டி20 கிரிக்கெட் தொடரை நடத்துவது தொடர்பான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுவிட்டது. வரும் நவம்பரில் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக மேற்கிந்தியத் தீவுகள் அணி லாகூர் வருகிறது.
இதுதவிர வரும் அக்டோபர் 29-ஆம் தேதி பாகிஸ்தான் - இலங்கை இடையிலான ஒரேயொரு டி20 ஆட்டம் லாகூரில் நடைபெற உள்ளது. எனினும் குறைந்தபட்சம் இரு ஆட்டங்களில் இலங்கை அணியை விளையாட வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான கிரிக்கெட் தொடர் முக்கியமான மைல்கல் ஆகும். அந்தத் தொடருக்குப் பிறகு மற்ற கிரிக்கெட் அணிகளையும் பாகிஸ்தானுக்கு அழைப்பதற்கான வழி ஏற்படும்.
தற்போது நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் உலக லெவன் அணியில் ஐந்து தென் ஆப்பிரிக்க வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
அடுத்தாண்டு தென் ஆப்பிரிக்க அணியை பாகிஸ்தானுக்கு அழைப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்படும். தற்போதைய நிலையில் லாகூரில் மட்டுமே போட்டிகளை நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
உரிய நேரம் வரும்போது கராச்சி, ஃபைசலாபாத், ராவல்பிண்டி, முல்தான் ஆகிய நகரங்களிலும் கிரிக்கெட் போட்டி நடத்தப்படும். தற்போது நடைபெற்று வரும் பாகிஸ்தான் - உலக லெவன் அணிகள் இடையிலான போட்டிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அது ரசிகர்களுக்கு அசாதாரணமாக இருக்கலாம். எனினும் இப்போதைக்கு அந்த விஷயத்தில் எந்தத் தளர்வும் செய்ய முடியாது. வரும் காலங்களில் ஏராளமான வெளிநாட்டு அணிகள் இங்கு வந்து விளையாடுகிறபோது, பாதுகாப்பு கெடுபிடிகள் குறையும்.
அதேநேரத்தில் பாகிஸ்தான் அணிக்கும், இங்கு வரும் வெளிநாட்டு அணிக்குமான பாதுகாப்பு விஷயத்தில் எவ்வித சமரசமும் கிடையாது” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.