
துபாய்,
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான பரபரப்பான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது பாகிஸ்தானின் 400-வது டெஸ்ட் போட்டியாகும்.
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் (பகல்-இரவு) கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்தது. பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 579 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக அசார் அலி ஆட்டம் இழக்காமல் 302 ஓட்டங்கள் சேர்த்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 357 ஓட்டங்கள் எடுத்து ‘ஆல்-அவுட்’ ஆனது. 222 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி 123 ஓட்டங்களில் சுருண்டது.
இதையடுத்து 346 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 4-வது நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 95 ஓட்டங்கள் எடுத்து இருந்தது.
இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாளான திங்கள்கிழமை வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ந்து விளையாடியது. டேரன் பிராவோ நிலைத்து நின்று சதம் விளாசிய போதிலும், மறுமுனையில் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்த வண்ணம் இருந்தன. பிராவோ களத்தில் நிற்கும் வரை ஆட்டத்தின் முடிவை கணிக்க முடியாத நிலை இருந்ததால் பரபரப்பு நிலவியது. அணியின் ஸ்கோர் 263 ஓட்டங்களாக உயர்ந்த போது, டேரன் பிராவோ (116 ரன், 249 பந்து, 10 பவுண்டரி, ஒரு சிக்சர்) யாசிர் ஷாவின் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து 7-வது விக்கெட்டாக வெளியேறினார். அத்துடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றி நம்பிக்கையும் கரைந்து போனது.
12 ஓவர்கள் எஞ்சி இருந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சில் 109 ஓவர்களில் 289 ஓட்டங்களில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை ருசித்தது. கேப்டன் ஜாசன் ஹோல்டர் 40 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் முகமது அமிர் 3 விக்கெட்டும், யாசிர் ஷா, முகமது நவாஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
வரலாற்று சிறப்பு மிக்க தங்களது முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியை வெற்றியோடு தொடங்கிய பாகிஸ்தானுக்கு ஒட்டுமொத்தத்தில் இது 400-வது டெஸ்டாக அமைந்தது. இதுவரை அந்த அணி 129 டெஸ்டுகளில் வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மிஸ்பா உல்-ஹக் தலைமையில் பாகிஸ்தான் அணி வெளிநாட்டில் பதிவு செய்த 23-வது டெஸ்ட் வெற்றி இதுவாகும். இதன் மூலம் வெளிநாட்டு மண்ணில் அதிக டெஸ்டில் வெற்றியை தேடிக் கொடுத்த கேப்டன்களான கிளைவ் லாய்ட் (வெஸ்ட் இண்டீஸ்), கிரேமி சுமித் (தென் ஆப்பிரிக்கா) ஆகியோரின் சாதனையை மிஸ்பா உல்-ஹக் சமன் செய்தார்.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 2-வது டெஸ்ட் போட்டி அபுதாபியில் வருகிற 21-ந் தேதி தொடங்குகிறது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.