இந்திய அணியை ஏளனம் செய்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்!!

By karthikeyan VFirst Published Jan 11, 2019, 3:32 PM IST
Highlights

புஜாராவின் பேட்டிங், பும்ராவின் பவுலிங் ஆகிய இரண்டும்தான் இரு அணிகளுக்கும் இடையேயான மிகப்பெரிய வித்தியாசமாக அமைந்தது. 

ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்று விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வரலாற்று சாதனை படைத்தது. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து என தொடர்ந்து வெளிநாடுகளில் தோல்வியை தழுவி வந்த இந்திய அணிக்கு, புதிய உத்வேகத்தை அளிக்கும் வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் வெற்றி அமைந்தது. 

இந்த தொடர் முழுவதுமே இந்திய அணி பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிலுமே ஆஸ்திரேலிய அணியின் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடியது. எப்போதும் மிகச்சிறந்த பேட்டிங் அணியாக மட்டுமே வெளிநாடுகளுக்கு செல்லும் இந்திய அணி, இந்த முறை மிகச்சிறந்த வலுவான பவுலிங் யூனிட்டுடன் ஆஸ்திரேலியாவுக்கு சென்றது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை கொண்ட ஆஸ்திரேலியாவுக்கு மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களுடன் சென்றது இந்திய அணி.

புஜாராவின் பேட்டிங், பும்ராவின் பவுலிங் ஆகிய இரண்டும்தான் இரு அணிகளுக்கும் இடையேயான மிகப்பெரிய வித்தியாசமாக அமைந்தது. ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதோடு அங்கிருக்கும் ஆடுகளங்களில் பந்து நன்றாக பவுன்ஸ் ஆகும். அதனால் எப்போதுமே மிரட்டலான வேகப்பந்து வீச்சை பெற்றிருக்கும் ஆஸ்திரேலிய அணிதான் எதிரணிகளை மிரட்டும். ஆனால் இந்த சுற்றுப்பயணத்தின்போது, வழக்கத்திற்கு மாறாக இந்திய பவுலர்கள் மிரட்டினர். ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் தலைக்கே வீசி மிரட்டினர் பும்ராவும் ஷமியும். அந்தளவிற்கு அபாரமாக பந்துவீசி எல்லா போட்டிகளிலுமே 20 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆஸ்திரேலிய அணியின் ஒரு வீரர் கூட இந்த தொடரில் சதமடிக்கவில்லை. அதேநேரத்தில் இந்த தொடரில் புஜாரா 3 சதங்களையும் கோலி ஒரு சதத்தையும் அடித்தனர். 

இவ்வாறு பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டதால்தான் இந்திய அணிக்கு வரலாற்று வெற்றி சாத்தியமாயிற்று. இல்லையெனில் தொடரை வென்றிருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாத ஆஸ்திரேலிய அணி வலுவற்று பலவீனமாக இருப்பதுதான் இந்திய அணியின் வெற்றிக்கு பிரதான காரணமாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

அப்படியான ஒரு கருத்தைத்தான் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது யூசுப்பும் தெரிவித்துள்ளார். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்ததற்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் பாகிஸ்தானின் பிரதமருமான இம்ரான் கான் மற்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்திருந்ததோடு, இந்திய அணியின் வெற்றியை மெச்சினர். 

ஆனால் முகமது யூசுப்போ இந்திய அணி பெரிதாக சாதிக்கவில்லை என்ற தோற்றத்தை உருவாக்கும் விதமாக, இந்திய அணியை மட்டம் தட்டும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார். தற்போதைய பலவீனமான ஆஸ்திரேலிய அணியை பாகிஸ்தான் அணிகூட, அதன் மண்ணில் வீழ்த்தும் என்று கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணி மிகச்சிறந்த வலுவான அணி மட்டுமல்லாது, டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 அணி. இந்திய அணியின் புள்ளியில் பாதியை மட்டுமே பெற்று 6வது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணி, தென்னாப்பிரிக்காவில் பலத்த அடி வாங்கியுள்ளது. அப்படியான அந்த அணியை இந்திய அணியுடன் ஒப்பிடுவதன் மூலம் இந்திய அணியின் மீதான குறைவான மதிப்பீட்டை வெளிக்காட்ட முயன்றுள்ளார். 
 

click me!