உலக கோப்பையில அவருதான் மிரட்ட போறாரு!! முன்னாள் வீரர் ஆருடம்

By karthikeyan VFirst Published Feb 7, 2019, 12:55 PM IST
Highlights

இங்கிலாந்தில் நடக்க உள்ள இந்த உலக கோப்பையில் இந்திய அணியின் பவுலிங், கண்டிப்பாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

உலக கோப்பை மே மாத இறுதியில் தொடங்க உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளே உலக கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு அதிகமுள்ள அணியாக பார்க்கப்படுகிறது. உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்து வருவது, ஒரு அணியாக இந்திய வீரர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. 

ரோஹித், தவான், கோலி என இந்திய அணியின் டாப் ஆர்டர்கள் மிக வலுவாக உள்ளது. புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி, குல்தீப், சாஹல் என பவுலிங் யூனிட்டும் பயங்கர மிரட்டலாக உள்ளது. இந்திய அணியின் பிரச்னையாக இருந்துவந்த மிடில் ஆர்டருக்கு ராயுடு, கேதர் ஜாதவ் மூலம் தீர்வு காணப்பட்ட திருப்தியில் இந்திய அணி உள்ளது. அனைத்து வகையிலும் சிறந்து விளங்கும் நல்ல கலவையிலான அணியாக உள்ள திருப்தியில் உள்ளது இந்திய அணி. 

பேட்டிங் அணியாக அறியப்பட்ட இந்திய அணி, பும்ரா, குல்தீப், சாஹல் ஆகியோரின் வருகைக்கு பிறகு மிகச்சிறந்த பவுலிங் அணியாகவும் திகழ்கிறது. வேகப்பந்து வீச்சில் பும்ராவும் ஸ்பின் பவுலிங்கில் குல்தீப் - சாஹல் ஜோடியும் மிரட்டலாக பந்துவீசிவருகிறது. குறிப்பாக குல்தீப் - சாஹல் ஸ்பின் ஜோடி, எதிரணிகளின் சொந்த மண்ணில் அந்த அணிகளின் பேட்டிங் ஆர்டரை சரித்து கெத்து காட்டிவருகிறது. வேகப்பந்து வீச்சில் பும்ரா மிரட்டுகிறார். அண்மைக்காலமாக ஷமியும் அசத்தலாக வீசிவருகிறார். 

இங்கிலாந்தில் நடக்க உள்ள இந்த உலக கோப்பையில் இந்திய அணியின் பவுலிங், கண்டிப்பாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்திய அணியின் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக திகழும். ஷமி மீண்டும் ஃபார்முக்கு திரும்பி அபாரமாக பந்துவீசுவது இந்திய அணிக்கு கூடுதல் பலம். நியூசிலாந்து தொடரில் 4 போட்டிகளில் ஆடி 9 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷமி, தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். இதேபோன்று உலக கோப்பையிலும் வீசினால் இந்திய அணிக்கு அது பலம் சேர்க்கும். 

உலக கோப்பையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய வீரராக ஷமி இருப்பார் என்று முன்னாள் பவுலர் கர்சான் காவ்ரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கர்சான், ஷமி முன்பைவிட இப்போது நன்றாக வீசுகிறார். அவரது மொத்த கவனமும் தற்போது கிரிக்கெட்டின் மீதும் பவுலிங்கின் மீதும்தான் இருக்கிறது. அவரது கெரியரில் இப்போதுதான் சிறந்த பவுலிங்கை வீசிக்கொண்டிருக்கிறார். உலக கோப்பையில் ஷமி கண்டிப்பாக ஆட வேண்டும். இங்கிலாந்து சூழலில் ஷமி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பவுலராக திகழ்வார் என்று கர்சான் தெரிவித்துள்ளார். 

மேலும் இன் ஸ்விங், அவுட் ஸ்விங் ஆகிய இரண்டையும் வீசுகிறார். நல்ல வேரியேஷனில் வீசுவதோடு மிகவும் துல்லியமாகவும் வீசுகிறார் ஷமி. அவரது லைன் அண்ட் லெந்த் அருமையாக உள்ளது. 140 - 145 கிமீ வேகத்தில் வீசுகிறார். யார்க்கர்களை மட்டும் துல்லியமாக வீச கற்றுக்கொண்டால் அவர் தான் ஹீரோவாக திகழ்வார் என்று கர்சான் தெரிவித்துள்ளார். 
 

click me!